மோகன்லாலுக்கு 63 வயதென்றால் நம்ப முடியாத அளவுக்கு அவரது ஃபிட்னஸ் இருக்கும். எப்போதுமே அதில் சமரசம் செய்து கொள்ளாத அவர் உடற்பயிற்சிகளில் பெரிதும் ஆர்வம் உள்ளவர். இப்போதெல்லாம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் வீடியோக்களை வெளியிடுவது அவருக்கு ஒரு வழக்கமாகி விட்டது, அதற்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவாகி விட்டனர். 






100 கிலோ எடையை தூக்கும் மோகன்லால்


அவர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வீடியோவில், 100 கிலோ எடையை தூக்குவதைக் கண்டு பலர் வாய் பிளக்கின்றனர். 60 வயதை கடந்த ஒருவர் இதனை செய்வதும், உடலை இப்படி கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதும் காண்போர் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அதுவே அவரை இன்னும் மலையாள சினிமாவில் நல்ல திரைப்படங்களை நடிக்கவும் உதவுகிறது. அவரது தொய்வுறாத நடிப்பு பலரை இன்னும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்: Manju Warrier Vijay Sethupathi: விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மஞ்சு வாரியர்.. என்னது இப்படி ஒரு ரோலா? குஷியான ரசிகர்கள்..


வெற்றியின் ரகசியம்


மோகன்லாலின் சினிமா வாழ்க்கையைப் பார்க்கும்போது, எல்லாப் பின்னடைவுகளையும் சகித்துக் கொண்டு, எல்லாவற்றிற்கும் மேலாக எப்படி உயர்ந்தார் என்பது அவரது விடாமுயற்சியில் தெரிகிறது. சினிமா மீதான முடிவில்லாத ஆர்வமும் காதலும்தான் அவரை இந்த அளவுக்கு தொடர வைத்திருக்கிறது என்று பலரும் கூறுவது இந்த வீடியோவை காணும்போது உண்மையெனப்படுகிறது. நடிப்பை வெறும் வேலையாக தான் கருதவில்லை என்பதை இதன் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். 



மம்முட்டி - மோகன்லால் 


மோகன்லால் மட்டுமல்ல, அவரது சமகாலத்தவரான மம்முட்டியும் தனது உடற்தகுதியில் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு இவரை விட வயது அதிகம் என்பதுதான் அதில் குறிப்பிடத்தக்க விஷயம். 70ஐ கடந்துவிட்ட அவர், இன்னும் 40 வயது போல இருப்பது பலருக்கும் ஆச்சர்யம். அவர் உடல் ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சிகள்தான் காரணம் என்று பல இடங்களில் மம்முட்டி கூறியுள்ளார். இந்த இரு நடிகர்களுமே தங்கள் சினிமா வாழ்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் உறுதியாகவே உள்ளனர்.


ஒழுக்கமான வாழ்க்கை முறையுடன் கலந்த சிறந்த நடிப்பு திறன் இந்த இரண்டு ஜாம்பவான்களின் தொடர்ச்சியான வெற்றிக்கு வழிவகுத்துவருவது பலருக்கும் பாடமாக அமைகிறது. 63 வயதான மோகன்லால் ஜிம்மில் 100 கிலோ எடையை தூக்கும்போது, அது நம்மை கண்டிப்பாக வியக்க வைக்கிறது. அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ குறைந்தது 100 பேரையாவது ஜிம்மிற்கு செல்ல தூண்டும் என்பது உறுதி.