இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இணையத்தளம் மூலம் இயங்கும் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, பிரபலமான ஓவர்-தி-டாப் (OTT) தளங்களைத் தேர்ந்தெடுத்துத் தடைசெய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற பிரபலமான பயன்பாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தடைக்கான பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்துப் பேசிய ட்ராய் மூத்த அதிகாரி ஒருவர், தற்போது வாட்ஸ்அப், டெலிகிராம் அல்லது இதே போன்ற பிற செயலிகளைத் தேர்ந்தெடுத்து அதனை தடைசெய்யும் வழிமுறை நிர்வாகத்திடம் தற்போது இல்லை என்றும் வங்கி, சுகாதாரம் மற்றும் ஆன்லைன் கல்விச் சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஆன்லைன் சேவைகளை இயக்குவதே ஒரே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு அதிகாரி கூறுகையில், இந்த செயலிகளின் பயன்பாடு தன்மையைப் பொறுத்தவரை, இந்த தளங்களில் தவறான செய்திகள் பகிரப்படுகின்றன, சில நேரங்களில் பகிரப்படும் செய்திகளால் வன்முறை வெடிக்கிறது என கூறியுள்ளார்.  


இதற்கு முன்னதாக டெலிகாம் கண்காணிப்பு குழு ஒரு ஆலோசனை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டது. அதில், பதற்றமான சூழ்நிலைகளை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட புவியியல் பகுதியில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற பயன்பாடுகளைத் தேர்ந்தெடுத்து தடை செய்வதற்கான கட்டமைப்பின் சாத்தியக்கூறுகளை விவாதித்து ஆராய்ந்தது, தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்ததை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.


செயலிகளை தேர்ந்தெடுத்து தடை செய்வது குறித்த கொள்கையை ஆராய வேண்டும் என்று டெலிகாம் குழு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைக்கு ஓவர்-தி-டாப் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். OTT நிறுவனங்கள் ஏற்கனவே தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-இன் கீழ் நிர்வகிக்கப்படுவதாகவும், மேலும் ஏதேனும் கூடுதல் சட்டங்கள், இந்த செயலிகளின் புதுமைகளைத் தடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.