கண்கள் சிவந்து, எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்பட்டால் சாதாரணமாக விட வேண்டாம். ஏனென்றால் நீங்கள் கண் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். கான்ஜன்க்டிவிடிஸ் என்ற வைரஸ் மூலம் ஏற்படும் கண் காய்ச்சலால் ஆண்டுதோறும் மில்லியன்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் இதனால் கண் பார்வை இழப்பு கூட ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 


கண் காய்ச்சல் ஏற்பட காரணம்


பொதுவாக மழை பெய்தால் பரவலாக எல்லாருக்கும் மெட்ராஸ் ஐ வரும். இந்த பருவமழை காலங்களில் மக்களுக்கு கண் வெண்படல அழற்சி அல்லது கண் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்த கண் வெண்படல அழற்சி அல்லது கண் காய்ச்சல் ஏற்படுவதற்கு புகைப்பிடித்தல், தூசிகள் மற்றும் செல்ல பிராணிகளின் தோலில் இருக்கும் பொடுகு மற்றும் ரசாயனங்கள் காரணம் என கூறப்படுகிறது. காண்டாக்ட் லென்ஸை நீண்ட நேரம் பயன்படுத்துவதாலும், கண்களை சரியாக சுத்தம் செய்யாததும் தொற்றுக்கு காரணமாக உள்ளது.


கர்ப்பிணி பெண்களுக்கு உடலுறவு மூலம் பாக்டீரியாவால் ஏற்படும் கொனோரியா பாதிப்பு இருந்தாலும், புதிதாக பிறக்கும் அவரின் குழந்தைக்கும் கண் வெண்படல அழற்சி நோய் தொற்று ஏற்படும். 


நோய் அறிகுறிகள்


கண் காய்ச்சல் நோயின் அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கு ஏற்ப வேறுபடும். ஆனால் பொதுவான அறிகுகள் என்பது கண் சிவப்பாக மாறுவது, கண் எரிச்சல், வீக்கம், அரிப்பு போன்றவை அடங்கும். கண் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மங்கலான பார்வை தெரியலாம். முக்கியமாக ஒவ்வாமை அவர்களுக்கு இருக்கும். 


நோய் பாதிப்பை தடுக்கும் முறை


இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமாக இருப்பதுடன், கண்களை கைகளால் தொடுவது, அசுத்தமான துணிகளில் துடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய துண்டு, தலையணை உள்ளிட்ட பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவதால் கண்காய்ச்சலை ஏற்படுத்த கூடிய வைரஸ்கள் பரவுதலை தடுக்க முடியும். கிருமி நாசினி கொண்டு கதவுகளின் கைப்பிடிகள் உள்ளிட்ட பிற உபயோக பொருட்களை சுத்தப்படுத்த வேண்டும். அலுவலகங்கள் மற்றும் படுக்கையறைகள் போதுமான காற்றோட்டமாக இருப்பதாக வைத்திருக்க வேண்டும். வழக்கமான கண் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவோர் அதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 


சிகிச்சை முறைகள்


கண் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் இயற்கை முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம். கண் சொட்டு மருந்து மூலம் கண் அரிப்பு மற்றும் சிகப்புத்தன்மையை குறைக்கலாம். பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நோய் எதிர்ப்பு சொட்டு மருந்துகளை கண்களில் பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான நீரில் சுத்தமான துணியை பிழிந்து கண்களுக்கு மேலும் ஒத்தடம் கொடுத்து எடுக்கலாம். 


கண் பாதுகாப்பிற்கான உணவுகள்


நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். வைட்டமின் பி-2 மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள், பால் பொருட்கள், தக்காளி, பப்பாளி, பாதாம் மற்றும் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும் என பரிந்துரைப்படுகிறது