விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான தீனாவுக்கு திருமணம் இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. 


திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீனா சினிமா அல்லது தொலைக்காட்சியில் எப்படியாவது பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னை கிளம்பி வந்தவர். ஆரம்ப காலக்கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு'  நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது இவரது டைமிங் வசனங்கள், நகைச்சுவை திறமையை கண்ட பலரும், மேடைகளில் பங்கேற்று திறமைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர். 


அந்த வகையில், நம்பிக்கையுடன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டேஜ் ஏற, அந்த நிகழ்ச்சியே தீனாவை உச்சத்துக்கு கொண்டு சென்றது. இதன்பின்னர் சினிமா பக்கம் வந்த தீனா, தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி,மாஸ்டர்  படங்களில் நல்ல கேரக்டரில் நடித்திருந்தார். 


தொடர்ந்து தனது நகைச்சுவையால் மக்கள் மனதை வென்ற தீனா கடந்த மார்ச் மாதம் சொந்த ஊரில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியிருந்தார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, “ஒரு வீடு சுவர்கள் மற்றும் விட்டங்களால் செய்யப்படுகிறது; காதல் மற்றும் கனவுகளுடன் ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது, என்னுடைய பூர்வீகத்தில் கனவு வீடு கட்டி விட்டது” என பதிவிட்டிருந்தார். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில் தீனாவுக்கு இனிதே திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கிராஃபிக் டிசைனராக பணியாற்றி வரும் பிரகதீஸ்வரி என்ற பெண் தான் தீனாவுக்கு மனைவியாக அமைந்துள்ளார். இந்த திருமணம் முழுக்க முழுக்க பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும். அவரது திருமண விழாவில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். இதனிடையே தீனாவின் திருமண புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 


முன்னதாக ஒரு நேர்காணலில், வீட்டை கட்டியது கொஞ்ச நாளிலேயே கல்யாணம் கைகூடி வந்ததாகவும், ரசிகர்கள் அன்பு மற்றும் கடவுளின் ஆசியால் தான் இது நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஷூட்டிங் இருந்ததால் நிறைய பேருக்கு என்னால் நேரில் போய் பத்திரிக்கை தர முடியவில்லை. அதனால் போன், வாட்ஸ்அப் மூலமாக அழைப்பு விடுத்திருந்தேன். சினிமா துறையினருக்காக சென்னையில் அடுத்த வாரம் வரவேற்பு நடக்கவுள்ளது என தெரிவித்திருந்தார். புதுமாப்பிள்ளைக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.