மீண்டும் இணையும் ஆதிக் அஜித் கூட்டணி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. துணிவு படத்திற்கு பின் அஜித் ரசிகர்களுக்கு திரையரங்கில் பெரும் கொண்டாட்டமாக இந்த படம் அமைந்தது. அஜித்தின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ் , இளையராஜா பாடல்கள் , முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் என திரையரங்கில் வசூலில் சக்கைபோடு போட்டு உலகளவில் ரூ 247 கோடி வசூலித்தது. அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்கிற கேள்வி பரவலாக இருந்து வந்த நிலையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது
AK 64
அஜித்தின் 64 ஆவது படமாக உருவாகும் இப்படம் தூத்துகுடியை மையப்படுத்திய கதைக்களத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறது. கே.ஜி.எஃப் படத்தில் நடித்த ஶ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக ஐசரி கணெஷ் ரூ 270 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
அஜித் சம்பளம்
சினிமா தகவல்களை வெளியிடும் வலைபேச்சு யூடியுப் சேனலில் ஏகே 64 பற்றிய புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்கள். அதன்படி இந்த படத்திற்கு அஜித் ரூ 180 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக அஜித் விஜய் இருந்து வருகிறார்கள். விஜய் தற்போது ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பை முடிவு செய்துள்ளார். ஜனநாயகன் படத்தோடு விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் பணியாற்ற இருக்கிறார். விஜய் மார்கெட் விட்டு வெளியேறினால் அதில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாவது நிச்சயம். அந்த இடத்தை அஜித் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித்தின் மார்கெட் பலமடங்கு அதிகரித்துள்ளது என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது
கார் ரேஸிங்கில் அஜித்
அஜித் தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் சர்வதேச கார் பந்தையங்களில் பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டு அக்டோபர் வரை கார் பந்தையங்களில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறார். நவம்பர் மாதம் முதல் அவரது அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனிடையில் அஜித் ஆதிக் கூட்டணி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்