நடிகர் ரஜினிகாந்தின் 170ஆவது திரைப்படமான வேட்டையன் (Vettaiyan) படத்தினை இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாக உள்ள நிலையில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ராணா டகுபதி உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.


33 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ரஜினி - அமிதாப்


மேலும், சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப் பச்சன் - ரஜினிகாந்த் என இந்திய சினிமாவின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.






இந்நிலையில் வேட்டையன் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் இணைந்திருக்கும் ஃபோட்டோக்கள் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. நிஜ வாழ்க்கையிலும் உற்ற நண்பர்களான ரஜினிகாந்தும் அமிதாப்பும் 1991ஆம் ஆண்டு வெளியான ஹம் இந்தி படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைகின்றனர்.



முன்னதாக “33 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என ரஜினி தன் இணைய பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். அமிதாப்பும் அதற்கு பதிலளித்து, “நீங்கள் தான் லீடர், தலைவர்,சீஃப்.  அதில் ஏதும் சந்தேகம் இருக்கிறதா? என்னை உங்களுடன் ஒப்பிட முடியாது. 33 ஆண்டுகளுக்குப் பின் உங்களுடன் பணியாற்றுவது என் பாக்கியம்” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இவர்களது காம்போவை திரையில் காண இருதரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.


வெளியான பாடல் காட்சி!


அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில், முன்னதாக நடிகர் ரஜினிகாந்தும் அனிருத்தும் இணைந்து ஆட்டம் போடும் ஷூட்டிங் வீடியொ ஒன்று இணையத்தில் வெளியானது. ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து அதிக எண்ணிக்கையிலான டான்சர்களுடன் படமாக்கப்பட்ட இந்தப் பாடலின் வீடியோ இணையத்தில் வைரலானது.  இந்நிலையில் வேட்டையன் திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களும் ரெடியாகி விட்டதாகவும், ஓப்பனிங் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


மேலும் நடிப்பு அரக்கன் எனப் பெயர் எடுத்துள்ள நடிகர் ஃபகத் ஃபாசிலும் இப்படத்தில் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும்,  ரஜினியுடனான அவரது காம்போ கலக்கலாக அமைந்திருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


மேலும் படிக்க: Ilaiyaraaja - Yuvan: என் செல்ல மகனே.. வெளிநாட்டில் யுவனுடன் க்யூட் ஃபோட்டோ பகிர்ந்த இளையராஜா!


Kavin Next Movie: தயாரிப்புக்கு பச்சைக்கொடி காட்டிய நெல்சன்! ப்ளடி பெக்கராக கவின் - வெளியான ப்ரோமோ வீடியோ