தமிழ் சினிமாவில் மூன்றே படங்களில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் தந்து வெற்றி இயக்குநராக உருவெடுத்துள்ள நெல்சன், தான் தயாரிப்பாளராக களமிறங்குவது பற்றிய மகிழ்ச்சியான அறிவிப்பினை கடந்த சில நாள்களுக்கு முன் பகிர்ந்திருந்தார். மேலும் இப்படம் பற்றிய தகவல்கள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி படம் பற்றிய கலக்கல் ப்ரோமோவுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்சனின் நீண்ட கால நண்பரும், கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகருமான கவின் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் நிலையில், இப்படத்துக்கு ‘ப்ளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவினின் லுக் டெஸ்ட் பற்றிய ஜாலியான காட்சிகளுடன் கவின், நெல்சன் மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.
லுக் டெஸ்ட் முடிந்து பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் கவின் இறுதியாக இந்த வீடியோவில் தோன்றும் நிலையில், நெல்சனின் வழக்கமான பாணியில் சுவாரஸ்யமாக அமைந்துள்ள இந்த ப்ரோமோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
புதுமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இந்தப் படத்தினை இயக்கும் நிலையில், ஜென் மார்ட்டின் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஹீரோயின் மற்றும் பிற நடிகர்கள் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.