தன் பாடல்களுக்கான முழு காப்புரிமை கோரி இளைராஜா தொடர்ந்துள்ள வழக்கு காரணமாக அவர் இணையத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இதனிடையே இளையராஜாவின் சமீபத்திய  மொரீஷியஸ் பயணம் மற்றும் புகைப்படங்கள் கவனமீர்த்து வருகின்றன.


மொரீஷியஸில் இளையராஜா


மொரீஷியஸ் கடற்கரையில் இளையராஜா அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் முன்னதாக வெளியான நிலையில், “பாடல்களுக்கான காப்புரிமை விவகாரத்தால் தமிழ் திரையிசை உலகில் சச்சரவுகள் மேலோங்க, இவர் கடற்கரையில் ரிலாக்ஸ் செய்தபடி இருக்கிறார்” என்ற ரீதியில் இணையத்தில் கமெண்டுகள் பறந்தன. இந்நிலையில் தன் மகன் யுவன் ஷங்கர் ராஜாவுடம் தான் இணைந்திருக்கும் க்யூட் புகைப்படம் ஒன்றை  நேற்று இளையராஜா பகிர்ந்திருந்தார்.


யுவனுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் புகைப்படத்தினை வாஞ்சையுடன் பகிர்ந்த இளையராஜா, “யுவன் மொரீஷியஸூக்கு வந்துள்ளார்” எனக் கூறி க்யூட்டாக பதிவிட்டிருந்தார். இளையராஜாவின் தார்மீகக் கோபம் ஒரு புறம் பேசுபொருளாக அதனிடையே அன்பு பொங்க அவர் பகிர்ந்த இந்தப் பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






என் தோழன் நீயல்லவா...


இந்நிலையில், தன் தந்தை இளையராஜாவுக்கு உணவு ஊட்டி விடும் வகையில் அவரது மகன் யுவனும் க்யூட் புகைப்படம் ஒன்றை இதயம் எமோஜியுடன் தற்போது தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 






இளையராஜாவின் ஒரே மகளும், யுவனின் அக்காவுமான பவதாரணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஜன.25ஆம் தேதி புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.


இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் பவதாரணி மறைவால் ஒட்டுமொத்தமாக நொறுங்கிப் போனது தமிழ் சினிமா ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நிலையில், தற்போது யுவனும், இளையராஜாவும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக, அன்பு பாராட்டி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் இதயங்களை அள்ளி வருகிறது.


கூலி படம், வைரமுத்து சர்ச்சை!


சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த் - லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தின் டைட்டில் டீசரில் இளையராஜா இசையமைத்த தங்க மகன் படத்தின் ‘டிஸ்கோ’ பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தன் அனுமதி இல்லாமல் இந்தப் பாடலை பயன்படுத்தி இருப்பதாக இளையராஜா சன் பிச்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த டீசரில் இருந்து இளையராஜாவின் இசையை நீக்க வேண்டும் அல்லது உரிய அனுமதி பெற வேண்டும் என இளையராஜா தரப்பில் கோரப்பட்டிருந்தது.


இதே போல் வைரமுத்து - இளையராஜா இடையே ஏற்கெனவே இருந்த பிரச்னை, இந்தக் காப்புரிமை விவகாரத்தை அடுத்து, தற்போது ஒரு பாடலுக்கு முக்கியம் இசையா, மொழியா என அடுத்த பரிமாணத்துக்கு போய் பேசுபொருளாகியுள்ளது.