பிரபல நடிகை ஷோபனா வீட்டில் திருடியதாக அவரது பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1980 ஆம் ஆண்டு வெளியான மங்களநாயகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷோபனா. இவர் தளபதி,பொன்மனச்செல்வன், எனக்குள் ஒருவன், சிவா, போடா போடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இவர் சென்னை தேனாம்பேட்டை ஸ்ரீமான் சீனிவாசா சாலையில் உள்ள குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறார். வீட்டின் முதல் தளத்தில் ஷோபனாவின் தாயார் ஆனந்தம் வசித்து வருகிறார். தரைத்தளத்தில் ஷோபனா தனது பரதநாட்டிய பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். இப்படியான நிலையில் இவரது வீட்டில் விஜயா என்பவர் கடந்த ஒரு வருடமாக பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த இவர், ஷோபனாவின் தயார் ஆனந்தத்தை கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டு வந்தா. இதனிடையே ஆனந்தம் வீட்டில் இருந்த பணம் காணாமல் போனதாகவும், இந்த விவகாரத்தில் விஜயா மீது சந்தேகம் இருப்பதாகவும் ஷோபனா தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு செல்போன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதில் விஜயா கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக ரூ.41 ஆயிரம் பணம் திருடியதாகவும், அந்த பணத்தை வீட்டின் கார் ஓட்டுநர் முருகன் என்பவரிடம் கொடுத்து ஜிபே செயலி மூலம் ஊரில் உள்ள மகளுக்கு அனுப்பியதாகவும் ஒப்புக் கொண்டார்.
இதற்கிடையில் இந்த விவகாரத்தில் ஷோபனா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி விஜயா தொடர்ந்து தன் வீட்டில் வேலை செய்யட்டும் என்றும், அவர் திருடிய பணத்தை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துக் கொள்வேன் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க..