ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டக் கூடிய காதல் திரைப்படமான ‘உனக்கும் எனக்கும்’ வெளியாகி 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 


ரீமேக்கான தெலுங்கு படம் 


ஜெயம் படத்தின் மூலம் நடிகராக ரவி அறிமுகமாகி ரசிகர்களால் இன்றளவும் ‘ஜெயம்’ ரவி என்றே அழைக்கப்படுகிறார். இதே படத்தில் தான் அவரது அண்ணன் ராஜாவும் இயக்குநரானார். ஜெயம் படம் தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக் ஆகும். தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படமும் ரீமேக் படம் தான். இந்த கூட்டணி 3வது முறையாக தெலுங்கு படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்தது. 


அந்த படம் தெலுங்கில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பல பரிணாமங்களை கொண்ட பிரபுதேவா இயக்கிய “நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டனா” ஆகும். இதுவே தமிழில் ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்” ஆக  உருவானது. தமிழ்நாடு அரசின் வரிவிலக்கு காரணமாக சம்திங் சம்திங்  வார்த்தை பின்னர் நீக்கப்பட்டு “உனக்கும் எனக்கும்” ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 


இணைந்த நட்சத்திர பட்டாளங்கள் 


இந்த படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, ரிச்சா பலோட், பிரபு, கீதா, பாக்யராஜ், சந்தானம், மல்லிகா, கொச்சின் ஹனிஃபா, லிவிங்ஸ்டன், மணிவண்ணன், தேஜாஸ்ரீ, கலாபவன் மணி, சச்சு, அரவிந்த் ஆகாஷ், மௌலி, காதல் தண்டபானி, கஞ்சா கருப்பு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் ஜெயம் ரவிக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொடுத்தது. 


படத்தின் கதை 


ஜெயம் ரவி லண்டன் வாழ் பணக்கார வீட்டு பையன், த்ரிஷா விவசாயி பிரபுவின் தங்கை. இருவருக்கும் ரிச்சா பலோட் திருமண நிகழ்விற்காக வந்திருந்தபோது காதல் உண்டாகிறது. ஆனால் இது ஜெயம் ரவியின் அம்மா கீதாவுக்கு தெரிய வர, அவர் த்ரிஷா மற்றும் பிரபுவை அவமானப்படுகிறார். இதனால் தங்கள் ஊருக்கே இருவரும் சென்று விடுகிறார்கள். திருமணம் நிகழ்வு முடிந்து திரும்பும் போது ஜெயம் ரவி, கீதாவிடம் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்த தப்பி, த்ரிஷா வீட்டுக்குச் சென்று காதலிப்பதை கூறுகிறார். முதலில் ஏற்க மறுக்கும் பிரபு, விவசாயம் செய்து தன்னை விட அதிகமாக நெல் அறுவடை செய்தால் தங்கையை திருமணம் செய்து தருவதாக கூறுகிறார். இந்த சவாலில் ஜெயம் ரவி ஜெயித்தாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.


சுருக்கமாக சொன்னால் ”காதலுக்காக எந்த கஷ்டம் வேண்டுமானாலும் படலாம்” என்பதே அடிப்படை கதையாகும்.


கொண்டாடி தீர்த்த மக்கள் 


உனக்கும் எனக்கும் படம் எதிர்பாராத அதிரி புதிரியான வெற்றியைப் பெற்றது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா என்பது போல மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்தனர். ஜெயம் ரவிக்கும், த்ரிஷாவுக்கு ஏற்கனவே இருந்ததை விட ரசிகர்கள் கூட்டம் அள்ளியது. 


படத்திற்கு மிகப்பெரிய பலமாக பாடல்கள் அமைந்தது. இன்றும் அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மனப்பாடம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த படத்தில் த்ரிஷாவின் அண்ணன் கேரக்டரில் நடிக்க பல நடிகர்களிடம் பேசிப்பார்த்துள்ளார் மோகன் ராஜா. ஆனால் யாரும் சம்மதம் சொல்லவில்லை. இறுதியாக பிரபு சம்மதித்தார். அந்த கேரக்டரை அவரை விட யாரும் சிறப்பாக செய்திருக்க முடியாது என்பதே உண்மை. 


இப்படி காலத்துக்கும் கொண்டாடக்கூடிய படமாக அமைந்தது ‘உனக்கும் எனக்கும்’ ...!


இதையும் படிங்க..


DD Returns Review: சிரிப்பு சரவெடி.. பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!


LGM Movie Review: தோனியின் முதல் தயாரிப்பு.. எல்.ஜி.எம் படம் சூப்பரா? ... சுமாரா? .. முழு விமர்சனம் இதோ..!