Pawan Kalyan: தெலுங்கானாவில் போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தன்னுடைய ஜனசேனா கட்சி டெபாசிட் இழந்ததால் நடிகர் பவன் கல்யாண் அப்செட்டில் உள்ளார்.
கடந்த மாதம் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் தெலுங்கானாவில் கடந்த நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்ட பின்னர், இதுவரை நடைபெற்ற இரு தேர்தல்களிலும் கே. சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி வெற்றிபெற்று இருமுறை ஆட்சி செய்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிப்பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைபோடு பிஆர்எஸ் கட்சி களமிறங்கியது. அதேநேரம் இந்த முறை காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியும் களமிறங்கியது.
இதனால் நடந்து முடிந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. கடந்த 30ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த இரண்டு முறை வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பிஆர்எஸ் கட்சி இந்த முறை தோல்வி அடைந்தது. இந்த முறை இந்தியா கூட்டணியில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
தென்னிந்தியாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பாஜகவின் கனவும் மீண்டும் தகர்ந்துள்ளது. இதில் பாஜகவின் கூட்டணியில் போட்டியிட்ட ஜன சேனா கட்சி, தேர்தலை சந்தித்தது. ஜன சேனா கட்சிக்கு மட்டும் 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தேர்தலில் ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்போடு பவன் கல்யாண் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், அவரின் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் படுதோல்வியை சந்தித்தது.
ஜனசேனா கட்சி தான் போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தது. சில தொகுதிகளில் நோட்டாவுக்கு பெற்ற வாக்குகளை காட்டிலும் ஜன சேனா கட்சிக்கு குறைவான வாக்குகளே பெற்றதால், நெட்டிசன்ஸ் டிரோல் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Entertainment Headlines: வரவேற்பைப் பெறும் கண்ணகி ட்ரெய்லர்.. கே.எஸ்.ரவிக்குமார் நெகிழ்ச்சி.. சினிமா ரவுண்ட்-அப் இன்று!