நடிகர் விஜய், 1992-ல் ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்தார். நாளைய தீர்ப்பு படம் மூலம் விஜய் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் அவரை ஒரு நடிகராக பெரிய அளவில் அங்கீகரித்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படம் தான். விக்ரமன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் கிடைத்தது. இன்று இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் அதை பார்க்க ரசிகர் கூட்டம் உள்ளது.
இதே பாணியில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து 1997ல் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 1999-ஆம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படமும் விஜய்யின் மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தியது.
2003ஆம் ஆண்டில் வெளியான திருமலை திரைப்படம் தான் விஜய்யை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. ஆம் இந்த படம் தான் அவரை ஆக்ஷன் ஹீரோ-வாக உயர்த்தியது. இதனை அடுத்து வெளியான கில்லி படமும், போக்கிரி படமும் விஜய்யை முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. 2011-ஆம் ஆண்டு வெளியான காவலன் திரைப்படம் இவரின் படங்கள் ஒரே மாதியாக உள்ளது என்ற விமர்சனங்களை தகர்த்தெரிந்தது. மேலும் இப்படத்தில் விஜயின் எதார்த்த நடிப்பு அப்ளாசை அள்ளியது.
இதனையடுத்து துப்பாக்கியில் ஆரம்பித்த புதிய பயணம், வசூல் ரீதியாக விஜய்யை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதனையடுத்து கத்தி, மெர்சல், தெறி என இவரின் நடிப்பில் பல வெற்றிப் படங்கள் வெளியாகின. நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இவரின் திரைப்படங்கள் சுமாராகவே இருந்தாலும் விஜய்-க்காவே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது.
விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என விவாதம் செய்யும் அளவிற்கு உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். திரையுலகில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலக்கட்டத்தில் உருவக்கேலிக்கும் விமர்சனததிற்கும் உள்ளான விஜய், இன்று தவிர்க்கமுடியாத சக்தியாக உயர்ந்து நிற்கிறார். வெற்றிகரமாக தனது திரை பயணத்தில் 32-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜயை அவரின் கோடான கோடி ரசிகர்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறது ஏபிபி நாடு.
மேலும் படிக்க
திண்டுக்கல் வெள்ள விநாயகர் கோயிலில் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிகவினர் வழிபாடு