Vijayakanth: தனக்குத் தெரிந்த விஜயகாந்த் ஒரு நாள் கூட காய்ச்சல், தலைவலி என்று படுத்தது இல்லை என்று அவரது நெருங்கிய நண்பர் வாகை சந்திரசேகர் (Vagai Chandrasekhar) கூறியுள்ளார். 

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் குறித்து அவரது நெருங்கிய நண்பர் வாகை சந்திரசேகர் தனியார் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.  “விஜயகாந்திற்கு நெருங்கிய நண்பர்களில் நானும் ஒருவன். விஜயகாந்த் எவ்வளவு கம்பீரமாக இருப்பான் என்று எங்களுக்கு தெரியும். விஜயகாந்த் சிறந்த நடிகன். 

 

எனக்கு தெரிந்து விஜயகாந்த் ஒரு நாள் கூட காய்ச்சல், தலைவலி என்று படுத்தது இல்லை. இயற்கையிலேயே அவர் நல்ல உடல்நலனை பெற்றிருந்தார். அப்படிப்பட்டவர் இந்த நிலையில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விஜயகாந்தும், நானும் 45 ஆண்டுகால நண்பர்களாக உள்ளோம். ஒரே அறையில் தங்கி, ஒரே பாயில் படுத்து சினிமாவில் வளர்ந்தோம். இன்றைக்கும் வரை எங்களுக்கு இருக்கும் நட்பு அப்படியே இருந்தது. 

 

விஜயகாந்த் கைகள் செயல்படாமல் உள்ளது. விரல்களை தூக்கினாலே நடுங்குகிறது. கம்பீரமான அவரது உடலும் சண்டைக் காட்சிகளில் மிரளும் அவரது கால்களும் கைகளும் இன்று முடங்கியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தால், வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு சென்று விஜயகாந்த் சென்று அவர்களை சமாதானப்படுத்தி கட்டுப்படுத்துவார். 

 

ஏதாவது அதிசயம் நடந்தால் விஜயகாந்த் மீண்டும் எழுந்து வருவார். காலம் அவரை மீண்டும் பழைய விஜயகாந்தாக கொண்டு வரும். விஜயகாந்த், ராதாரவி மற்றும் நான் கட்டுப்பாடற்ற நண்பர்களாக இருந்ததால், சினிமாவில் எங்களை ஒதுக்கினர். எங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பது அவர்களுக்கு தலைவலியாக இருந்தது. 

 


"நண்பா நீ நலமுடன் எழுந்து வா.. கம்பீரமாக வா.. எனக்கு தெரிந்து உனக்கு காய்ச்சல் வந்தது இல்லை, தலைவலி வந்தது இல்லை. இப்போது பெரும் படுக்கையாக உள்ளாயே..." என மிகுந்த வேதனையுடன் பேசியுள்ளார். 

 


விஜயகாந்த் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால், அவரது கேரக்டரில் நடிக்க தற்போது யாருமே இல்லை. அவரது உடல்நிலை மட்டும் சரியாக இருந்ததால் பலமான ஒரு அரசியல் தலைவராக மாறி இருப்பார் எனவும் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.