மறைந்த ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அவரது தயாரிப்பில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ரஜினிகாந்தின் ஆஸ்தான தயாரிப்பாளர்
சென்னை, தி.நகரில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சரும் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
“ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து நம் எல்லாரையும் பிரிஞ்சிருக்கார் உத்தமர் ஆர்.எம்.வீரப்பன் சார் அவர்கள். அமரர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா, அரசியல் வாழ்க்கை என அனைத்திலும் அவரது வலது கையாக இருந்தவர் ஆர்.எம்.வி சார்.
‘எங்கள் நட்பு புனிதமானது’
அவரால் உருவாக்கப்பட்ட அவருடைய பல சிஷ்யர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி கல்வி நிறுவன அதிபர்களாகி பேரும் புகழும் பணத்துடனும் இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.எம்,வீரப்பன் எப்பவும் பணத்துக்கு பின் போனவர் அல்ல. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அண்ணா சொன்னது போல் அதனை கடைபிடிச்சு வாழ்ந்தவர். எனக்கும் ஆர்.எம்.வீரப்பனுக்கும் இருந்த நட்பு மிகவும் ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. இப்போது அவர் நம் கூட இல்லை என்பதால் இதை சொல்லவில்லை. என் வாழ்நாளில் நான் அவரை மறக்கவே முடியாது. அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" எனப் பேசியுள்ளார்.
அரசியல், சினிமா பயணம்
அரசியல், சினிமா இரண்டிலும் வெற்றிகரமாக வலம் வந்த எம்.ஆர். வீரப்பன் இன்று வயது மூப்பு காரணமாக தன் 98ஆம் வயதில் மறைந்தார்.
எம்ஜிஆர் கழக நிறுவனர், சத்யா மூவீஸ் நிறுவனர் என சிறந்து விளங்கிய எம்.ஆர்.வீரப்பன், எம்ஜிஆரின் காவல்காரன், நான் ஆணையிட்டால், ரிக்ஷாக்காரன், இதயக்கனி என வெற்றிப்படங்களைத் தயாரித்தவர். நடிகர் ரஜினிகாந்துக்கும் இதேபோல் மூன்று முகம், தங்க மகன், பணக்காரன், பாட்ஷா என சூப்பர்ஹிட் வெற்றிப் படங்களின் தயாரிப்பாளராக விளங்கியதுடன் உற்ற நண்பராகவும் வலம் வந்தார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சராகவும், மேலும் முன்னாள் மறைந்த முதலமைச்சர்களான ஜானகி, ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளிலும் பொறுப்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில் முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், பல அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: Vijay - Saibaba Temple: அம்மாவுக்காக சாய்பாபா கோயில் கட்டிக்கொடுத்த நடிகர் விஜய்.. சில சுவாரஸ்யங்கள்..
TN BJP: பாஜகவில் இணைந்த பிரபல சினிமா தம்பதியினர்.. ஆச்சரியத்தில் கோலிவுட்!