Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:
அமலாக்கத்துறை சேகரித்த ஆதாரங்களின் மூலம் அவர் சதி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லஞ்சம் வாங்கியதும் அதை அவர் கோவா தேர்தலுக்காக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், அதற்கு அடுத்த நாளே அமலாக்கத்துறையால் காவலில் எடுக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததற்கு எதிராகவும், காவலில் எடுக்க விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதத்தை கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மா, கடந்த 3ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை ஒத்துவைத்தார்.
லஞ்சம் வாங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்:
இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், பல முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளது.
"குற்றம் சாட்டப்பட்டவர் (கெஜ்ரிவால்) கைது செய்யப்பட்டு, காவலில் வைத்திருப்பது சட்டப்படி நடந்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை என இந்த நீதிமன்றம் கருதுகிறது. மக்களவை தேர்தல் எப்போது நடக்கும் என்பதை கெஜ்ரிவால் அறிவார்.
அரவிந்த் கெஜ்ரிவால் சதி வேலையில் ஈடுபட்டது அமலாக்கத்துறை சேகரித்த ஆதாரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. லஞ்சத்தை பெற்று கொண்டு அவர் அதை ரகசியமாக பயன்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் தனிப்பட்ட அளவிலும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற அளவிலும் செயல்பட்டுள்ளார்" என நீதிபதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, "நீதிபதிகள் அரசியலுக்கு அல்ல சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள் என்று நாங்கள் கருதுகிறோம். அரசியல் சார்ந்து அல்ல சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீதிமன்றங்கள் அரசியலுக்குள் செல்ல முடியாது.
விசாரணையை எப்படி நடத்த வேண்டும் என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் முடிவு செய்ய முடியாது. குற்றம் சாட்டப்பட்டவரின் வசதிக்கேற்ப விசாரணை இருக்காது. முதலமைச்சர் உட்பட யாருக்கும் குறிப்பிட்ட சிறப்பு சலுகைகள் வழங்க முடியாது" என்றார்.
இதையும் படிக்க: சாதிவாரி கணக்கெடுப்பை விடுங்க.. சொத்துகளை பகிர்ந்தளிக்க கணக்கெடுப்பாம்.. ராகுல் காந்தி அடுத்த அதிரடி!