தமிழ் சினிமாவின் காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் இருவரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பிரபலங்களும் தாங்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகை நமீதா, நடிகர்கள் செந்தில், கூல் சுரேஷ், டான்ஸ் மாஸ்டர் கலா ஆகியோர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாஜகவில் குஷ்பூ, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.
இந்நிலையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் இருவரும் பாஜகவில் இணைந்தனர். அவர்கள் மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் மேடையில் பேசிய நடிகை ஆர்த்தி, “இன்னைக்கு கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு இருந்திருந்தா அவர்களுக்கு இணையாக அவர்களை விட அதிகமாக படித்து திறமையோடு,வீரத்தோடு, தைரியத்தோடு, தன்னம்பிக்கையோடு, லட்சியத்தோட மக்களை காப்பாத்தணும்ன்னு நினைச்ச அண்ணாமலையை தங்களுடன் சேர்த்துக் கொண்டிருப்பார்கள்
இந்தியாவில் மிகப்பெரிய கட்சி பாஜக. இன்னைக்கு என் சொந்த ஊரில் அக்கட்சியில் இணைவது ரொம்ப சந்தோசமாக உள்ளது. எல்லா கடவுளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சிரிப்பு நடிகையாக இருந்தாலும் இப்போது சிந்திக்க வைக்க வந்துள்ளேன். எங்களுக்கு கலைஞர் கருணாநிதி திருமணம் செய்து வைத்தாலும் நாங்கள் ஒருபோதும் திமுகவில் இருந்ததில்லை. அதன்பிறகு அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக 3 தேர்தல்களை சந்தித்தேன். ஜெயலலிதா மறைவுக்குப் பின் நல்ல தலைவராக இப்போது அண்ணாமலையை பார்க்கிறேன்” என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.