இந்திய திரையுலகில் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். 2012ம் ஆண்டு இவர் இயக்கிய நண்பன் படத்திற்கு பிறகு எந்தவொரு மாஸ் ஹிட்டையும் இவர் அளிக்கவில்லை. இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்ட படங்களை இயக்கி வந்தவருக்கு ஐ படமும், 2.0 படமும் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதே உண்மை.


இதையடுத்து, இந்திய சினிமாவிற்கு தான் யார் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தியன் 2 படத்தையும், ராம்சரண் நடிக்கும் படத்தையும் இயக்கி வருகிறார். ஆர்.ஆர்.ஆர். படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் ராம்சரண் புகழ் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. ராம்சரண் – ஷங்கர் கூட்டணியை இந்திய சினிமாவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளது.




இந்த நிலையில், ஆர்.சி.15 எனப்படும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சார்மினாரில் நடைபெற உள்ளது. ஹைதரபாத்தில் உள்ள புகழ்பெற்ற சார்மினாரில் படப்பிடிப்பு நடைபெறுவதை படத்தின் இயக்குனர் ஷங்கரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஷார்மினார் முன்பு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் இந்த பதிவை ஷங்கர் தெரிவித்துள்ளார்.






தில் ராஜூ –  ஸ்‌ரீஷ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ராம்சரணுடன் இணைந்து கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நடிக்கிறார். ஷங்கர் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானே பெரும்பாலும் இசையமைத்து வந்த நிலையில், தெலுங்கில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக உள்ள தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு திரு, ரத்னவேலு ஒளிப்பதிவாளர்களாக உள்ளனர். இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் எழுதியுள்ளார்.




இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் மலையாள நடிகர் ஜெயராம், சுனில், நவீன் சந்திரா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஷங்கர் தெலுங்கில் நேரடியாக இயக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஷங்கர் ஆர்.சி.15, இந்தியன் 2 ஆகிய படங்கள் மூலம் இந்திய சினிமாவில் கம்பேக் கொடுப்பார் என்று அவருடைய ரசிகர்கள் நம்புகின்றனர்.


ராம்சரணின் படப்பிடிப்பு ஒரு புறம் தீவிரமாக நடைபெற்று வரும் அதேவேளையில், மறுமுனையில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பையும் தீவிரமாக நடத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க:Kaakha Kaakha: நடிக்க மறுத்த சூர்யா.. சம்மதம் வாங்கிய ஜோதிகா.. 'காக்க காக்க' உருவானதன் சுவாரஸ்ய பின்னணி..!


மேலும் படிக்க: Vijay SRK Shankar Combo: ஷங்கர் இயக்கத்தில் இணையும் விஜய்- ஷாருக்கான்? ரூ.900 கோடியில் பிரமாண்ட படம்?