தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். படத்திற்கு படம் மாறுபட்ட கெட்டப், வித்தியாசமான நடிப்பு என ஆக்‌ஷனுக்கும், நடிப்புக்கும் எந்த குறையும் வைக்காத அளவிற்கு திறமையான கலைஞர் சூர்யா.


இவரது நடிப்பில் வெளியான படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று காக்க காக்க. இன்று காவல்துறையில் சேரும் பலருக்கும் திரைப்படங்கள் வாயிலாக ஒரு உந்துசக்தியாக இருப்பவர் சூர்யா. இவர் காவல்துறையாக நடித்த கெட்டப்புகள் அனைத்தும் ரசிகர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானது என்றே கூறலாம். அந்த வகையில் சூர்யா முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்த படம் காக்க காக்க.




இந்த படம் உருவாகியதன் பின்னணில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. நேருக்கு நேர் படம் மூலமாக அறிமுகமாகிய சூர்யா அப்போதுதான் நந்தா, மௌனம் பேசியதே என தான் ஒரு நல்ல நடிகன் என நிரூபிக்கத் தொடங்கிய தருணம் அது. தற்போது தமிழில் ஸ்டைலிஷ் இயக்குனராக உலா வரும் கௌதம் மேனன் மின்னலே படத்தை முடித்துவிட்டு இரண்டாவது படத்திற்காக காத்திருந்த தருணமும் அது.


காவல்துறை அதிகாரிகள் பற்றி கதை மீது அதிக ஆர்வம் கொண்ட கௌதம் மேனன், காக்க காக்க படத்திற்கான திரைக்கதையை உருவாக்கியிருந்தார். அந்த கதைக்கு ஏற்ற நாயகன் யார் என்று தேடிக்கொண்டிருந்தவருக்கு சூர்யா படத்தின் நாயகனாக அன்புச்செல்வன் கதாபாத்திரத்திற்கு மிகவும் சரியான தேர்வாக இருப்பார் என்று மனதில் ஆழமாகத் தோன்றியது. இதையடுத்து, அவர் சூர்யாவைச் சந்தித்து இந்த கதையை நேரில் கூறியுள்ளார்.




‘காக்க காக்க’ படம் வழக்கமான போலீஸ் ஆக்‌ஷன் பாணியாக இல்லாமலும், வித்தியாசமாக இருந்ததாலும், இறுதிக்காட்சியில் கதாநாயகி உயிரிழந்தது போல இருப்பதாலும் சூர்யா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். பின்னர், கௌதம் மேனன் ஜோதிகாவிடம் இந்த கதையை கூறி இந்த படத்தில் சூர்யா நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கௌதம் மேனன் கதையின் மீது வைத்திருந்த நம்பிக்கையாலும், கெளதம் மேனன் மீது ஜோதிகா வைத்திருந்த நம்பிக்கையாலும் காக்க காக்க படத்தில் நடிக்க சூர்யாவிடம் ஜோதிகா பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, ஜோதிகாவிற்காக சூர்யா நடிக்க ஒப்புக்கொண்ட படம்தான் காக்க காக்க. சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு, வித்தியாசமான கதைக்களம், ஹாரிஸ் ஜெயராஜ் இசை என இந்த படமே தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமாக அமைந்தது.




அன்புச்செல்வன் கதாபாத்திரம், பாண்டியன் கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது. ஹாரிசின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்க தமிழில் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது காக்க காக்க. சூர்யாவின் போலீஸ் கெட்டப்பும் பலருக்கும் பிடித்துப்போனது.


காக்க காக்க படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் கர்ஷனா என்றும், இந்தியில் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் போர்ஸ் என்றும், கன்னடத்தில் தண்டம் தசகுணம் என்றும் ரீமேக் செய்யப்பட்டது. இன்றும் சூர்யாவின் கேரியரில் காக்க காக்க படம் மிகவும் முக்கியமான மைல்கல் என்றே கூறலாம்.