தமிழ் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக விஜய் திகழ, இந்தி திரையுலகின் வசூல் சாம்ராட்டாக ஷாருக்கான் கோலோச்சி வருகிறார். சமீபத்தில் வெளியான இவர்களது வாரிசு மற்றும் பதான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்துள்ளது. மாஸ் நடிகர்களாக கொண்டாடப்படும் இவர்கள் இருவரும் திரையில் தோன்றுவதை கண்டாலே போதும் என ரசிகர்கள் கருதி வரும் நிலையில், இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினால் அந்த திரைப்படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள். அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தான் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் பிரமாண்டத்திற்கு பெயர் போன, ஷங்கரின் இயக்கத்தில் தான், ஷாருக்கான் மற்றும் விஜய் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


விஜய் - ஷங்கர் - ஷாருக்கான்:


தெலுங்கில் ராம் சரனை வைத்து ஒரு படத்தையும், தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் - 2 திரைப்படத்தையும், ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படங்களை முடித்த கையோடு, ரூ.900 கோடி பட்ஜெட்டில் தண்ணீருக்கு அடியில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்ட, அறிவியல் புனைவுக்கதையை ஷங்கர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு ஹீரோக்களை மையமாக கொண்ட இந்த கதையில் தான், விஜய் மற்றும் ஷாருக்கான் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான பணிகளை பூர்த்தி செய்ய நீண்ட காலம் ஆகும் என்பதால், விஜய் மற்றும் ஷாருக்கான் ஒப்புக்கொள்வதை பொருத்தே இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தத்தமது திரையுலகங்கள் மட்டுமின்றி, இந்திய அளவிலும் வசூல் ராஜாக்களாக திகழும் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்தால், அந்த திரைப்படம் வசூலில் பெரும் சாதனையை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


விஜய் - ஷாருக்கான் நட்பு:


விஜய் மற்றும் ஷாருக்கான் இதுவரை எந்தவொரு படத்திலும் இணையாவிட்டாலும், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டி வருகின்றனர். அண்மையில் ஜவான் திரைப்பட படப்பிடிப்பிற்காக சென்னை வந்திருந்த போதும், நடிகர் விஜயை ஷாருக்கான் சந்தித்து இருந்தார். அதோடு, ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் டிரெய்லரை, தமிழில் நடிகர் விஜர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதோடு, ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


எப்போது அறிவிப்பு?


இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இந்த திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இதேபோன்று, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்களின் இந்த திரைப்படங்கள் முடிந்த பிறகு தான், விஜய்-ஷங்கர் - ஷாருக்கான் கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.