ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. ஜெயிலர் படம் திரையரங்கில் ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்னதாகவே ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். முதலில் இமயமலைக்கு சென்ற ரஜினி, அங்கு ஒரு வாரம் தங்கி அங்குள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வந்தார். அதை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஜார்க்கண்ட் சென்ற ரஜினிகாந்த், ஆன்மீக பயணத்தை தொடர்ந்தார். இதனிடையே ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.
ஜார்க்கண்ட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு உத்தர பிரதேசம் சென்ற ரஜினிகாந்த், அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் படத்தை பார்க்க உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் யோகி ஆதித்யநாத் வராததால் அம்மாநில துணை முதல்வருடன் ரஜினிகாந்த் ஜெயிலர் படம் பார்த்தார். இதையெல்லாம் முடித்துக் கொண்டு உபி முதல்வரை சந்திக்க நேரில் சென்ற ரஜினிகாந்த், அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில் இதை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு தற்போது வயது 72 ஆகிறது. யோகி ஆதித்யநாத்துக்கோ 51 வயது தான் ஆகின்றது. இந்நிலையில் தன்னைவிட இளையவரின் காலில் விழுந்துவிட்டார் ரஜினி என கூறி காட்டமாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நடிகர் கமல் பேசிய வீடியோ ஒன்றையும் தற்போது நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள கமல், நாளைக்கு எதாவது ஒரு மந்திரசக்தி உள்ள சாமியார், மகாகணம் பொருந்தியோர் ஒரு தெய்வத்தை கொண்டு வந்து நிறுத்தி விட்டால் கைகுலுக்கி வரவேற்பேன். காலில் விழுந்து கும்பிட மாட்டேன் என அந்த வீடியோவில் கமல் பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இதற்கு முன் வெளியான அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்ப்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் தற்ற்போது வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி அவருக்கு மிகவும் அவசியப்பட்டது. இந்நிலையில் அவர் எதிர்ப்பாத்தப்படியே ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் வெற்றி அடைந்துள்ளது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வந்த ரஜினிக்கு ஆதரவாக பல்வேறு பாசிட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
மேலும் படிக்க