குகி-மெய்தி கலப்பு பெற்றோரின் ஏழு வயது சிறுவன், அவனது தாய் மற்றும் அத்தையை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட 20 வழக்குகளை மணிப்பூர் காவல்துறை சிபிஐயிடம் ஒப்படைத்தது. கடந்த மே 3ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் வெடித்த இன மோதல்கள் குறித்து அதன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்த சிறுவனின் தாய் மெய்தே சமூகத்தைச் சேர்ந்தவர், அவனது தந்தை ஒரு குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மெய்தி சமூகத்தின் பட்டியல் பழங்குடி (ST) அந்தஸ்து கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மலை மாவட்டத்தில் பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக குகி மற்றும் மெய்தி இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 


இந்தநிலையில்தான், மேற்கு இம்பால் மாவட்டத்தின் ஐரோயிசெம்பாவில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட ஆம்புலன்ஸ் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதில் டோன்சிங் ஹேங்சிங் என்ற 7 வயது சிறுவன் கொல்லப்பட்டான். கும்பல் தாக்கியபோது ஆம்புலன்சில் ஓட்டுநரும், செவிலியரும் இருந்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போலீசார் பின்வாங்க வேண்டிய நிலையில் ஓட்டுநரும் செவிலியரும் தப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். சிறுவனின் தாய் மற்றும் அத்தையின் பலமுறை வேண்டுகோள்களுக்கு அந்த கும்பல் செவிசாய்க்கவில்லை என்றும், வாகனத்திற்குள் அவர்களுடன் ஆம்புலன்சுக்கு தீ வைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


என்ன நடந்தது அன்றைய நாளில்..? 


கடந்த ஜூன் 4ம் தேதி இம்பாலின் புறநகர்ப் பகுதியில் 2,000 பேர் கொண்ட மெய்டே கும்பல், புல்லட் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஏழு வயது சிறுவன், அவனது தாய் மற்றும் உறவினரை உயிருடன் எரித்து, காவல்துறையின் முன் ஆம்புலன்ஸை எரித்ததாகக் கூறப்படுகிறது.


இந்த எரிப்பு சம்பவத்தில் டோன்சிங் ஹேங்சிங், 7, அவரது தாயார் மீனா ஹாங்சிங், 45, அவர்களது உறவினரான லிடியா லூரெம்பாம், 37, மைதேய் கிறிஸ்தவர் என அடையாளம் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மூன்று பேரும் இம்பாலுக்கு மேற்கே 15 கிமீ தொலைவில் உள்ள காங்சுப்பில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் முகாமில் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது, அஸ்ஸாம் ரைபிள்ஸ் முகாமில் இருந்து பிராந்தியத்திற்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டபோது எரிக்கப்பட்டதாக ​​இறந்தவர்களின் உறவினர் பாலோன்லால் ஹாங்சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்தாவது, “மே 3 முதல் மெய்டே சமூகத்தில் இருந்து நாங்கள் பல கொடுமைகளை சந்தித்து வருகிறோம், ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் மிக மோசமானது. உடல்கள் கருகியிருந்தன... சில எலும்புகள் மட்டுமே சாம்பலில் காணப்பட்டன” என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், “மீனாவும் லிடியாவும் கிறிஸ்தவர்கள் ஆனால் அவர்கள் மெய்தே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர்கள் கூட காப்பாற்றப்படவில்லை” என்றும் தெரிவித்தார். 


இந்தநிலையில், நீண்ட நாட்களாக இந்த வழக்கை மணிப்பூர் காவல்துறையினர் விசாரித்து வந்த சூழலில் தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.