சோனி தயாரிப்பு நிறுவனம் வழங்கும் ஸ்ரீமத் ராமாயண் தொலைக்காட்சித் தொடரின் டீசர் வெளியாகி இணையதளத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது. ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் விட்டதை இந்தத் தொடர் பூர்த்தி செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


ராமாயணம்


இந்திய சினிமா தோன்றியது முதலே இந்திய புராணக் கதையான ராமாயணம் ஒவ்வொரு தலைமுறையிலும் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது. தொலைக்காட்சித் தொடராக, குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன்களாக, திரைப்படங்களாக என மக்களை சென்றடையக் கூடிய அத்தனை கலை  வடிவங்களின் வழியாகவும் ராமாயணத்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.


தனது நாட்டைப் பிரிந்து தனது சகோதரன் லட்சுமணன் மற்றும் மனைவி சீதையுடன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்கிறார் ராமன். சீதையின் அழகால் ஈர்க்கப்பட்டு அவரை கடத்திச் செல்கிறார் ராவணன். அனுமனின் உதவியுடன் தனது மனைவியை மீட்டு ராவணனைக் கொன்று மீண்டும் தனது நாட்டிற்கு ராமன் அரசனாவதே வால்மீகி ராமாயணத்தின் அடிப்படை சாராம்சம்.


ஆதிபுருஷ்


இந்தக் கதையை மையமாக வைத்து நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுமார் 500 கோடி ரூபாய் செலவில் உருவானது ஆதிபுருஷ். பிரபாஸ் ராமனாக நடிக்க, க்ரித்தி சனோன் சீதையாகவும், பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்து வெளியான இந்தத் திரைப்படம் படுதோல்வியடைந்தது.


படு சுமாரான கிராஃபிக்ஸ், சுமாரான நடிப்பு, எந்த வித புதுமையும் இல்லாமல் அதே கதையை அப்படியே எடுத்து வைத்தது என எக்கச்சக்கமான விமர்சனங்கள் படத்தின் மீது எழ, பாக்ஸ் ஆபிஸில் மட்டையடி வாங்கியது ஆதிபுருஷ். இனிமேல் ராமாயணம், மகாபாரதம் எடுக்கிறேன் என்று யாராவது வந்தால்... என்று ரசிகர்கள் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், தற்போது அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது ஸ்ரீமத் ராமாயணவின் டீசர்.


 


தொலைக்காட்சித் தொடராக ராமாயணம்






ஏற்கெனவே 1987ஆம் ஆண்டு ராமாநந்த் சாகர் இயக்கிய ராமாயண தொலைக்காட்சித் தொடர் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு முறையாக சின்னத்திரையில் ஒளிப்பரப்பாக உள்ளது ராமாயணம்.


சோனி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தத் தொடரை தயாரித்து வழங்கியிருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்தத் தொடரின் டீசர் ஆதிபுருஷ் திரைப்படத்தால் எழுந்த கோபத்தை சற்று குறைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அதே போல் இந்தத் தொடரில் இடம்பெற்றிருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள் ஆதிபுருஷ் படத்தை விட தரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஒளிப்பரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.