நீட் தேர்வு ரத்து செய்ய ஆதரவளித்தால் அமைச்சர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டாலும் கவலையில்லை; மாணவர்களின் கல்வி உரிமையே முக்கியம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், நீட் ரத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோரை கண்டித்து தி.மு.க.வின் பல்வேறு அணிகள் சார்பில் மதுரையை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க.வினர் இன்று (20/08/2023) உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடைபெறுவதால் அங்கு நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


சென்னை வள்ளுவர் கோட்டம்


சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்தப் போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மாவட்ட்ட தலைநகரங்களில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.


அமைச்சர் உதயநிதி நிறைவுரை


வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”தமிழ்நாட்டில் நீட் தேர்வால் 21 உயிர்களை இழந்துள்ளோம். மாணவர்களின் கல்வி உரிமைதான் முக்கியம். அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக உள்ளோம். நீட் தேர்வு உயிரிழப்பிற்கு மத்திய அரசும், அதிமுகவும்தான் காரணம். இந்த உண்ணாவிரப் போராட்டத்தில் அண்ணனாக பங்கேற்றுள்ளேன். ஆளுநர் ரவியை ஆர்.எஸ்.எஸ். ரவி என்று சொல்வதே சரியாக இருக்கும். அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று சொன்னார்கள்.அதிமுகவை சேர்ந்த ஒருவர் என் மீது புகாரே கொடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டால் பதவி இழப்பு ஏற்க நேரிடும் என்று..இந்த அமைச்சர் பதவி இருந்தால் இருக்கட்டும் இல்லையென்றால் போகட்டும்..”என்று உரையாற்றினார். 


ஆளுநரை பதவி விலக வேண்டும் என்றும் உதயநிதி பேசினார். ”ஆளுநரே 'Who are you? you are Post Man’ என்றும் நீங்கள் ஒரு தபால்காரர்; மாநிலத்தின் / முதலமைச்சரின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்க்கும் பணி செய்வதே ஆளுநரின் பணி என்றும் அதை சரியாக செய்யவில்லை” என்றும் தெரிவித்தார். 


”தமிழ்நாடு ஆளுநரிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்ட அம்மாசியப்பன் நடவடிக்கை எடுக்க பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அம்மாசியப்பன் வேலைக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் சும்மா விட மாட்டோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான முழு நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிக்காத ஒரே கட்சி பாஜகதான். மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மட்டும் அனுப்புவதுதான் ஆளுநரின் பணி. தகுதியற்ற நீட் தேர்வை என்றைக்கு ஒழிக்கிறோமோ அன்றைக்குதான் தமிழ்நாடு மாணவர்களுக்கு விடியல் கிடைக்கும்.


நீட் விலக்குக்கான இன்றைய போராட்டம் ஆரம்பம் மட்டுமே, இது முடிவல்ல. நீட் எதிர்ப்பு போராட்டத்தை அனைத்துக் கல்லூரி மாணவர்களும் முன்னெடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் போல் மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட்டுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம். ” என்று அவர் தெரிவித்தார்.


நீட் தேர்வுக்கு எதிராக போராட அ.தி.மு.க.-விற்கு அழைப்பு


நீட் தேர்வை ரத்து செய்யும் போராட்டத்தில் அ.தி.மு.க.-வும் இணைய வேண்டுன் என அமைச்சர் உதயநிதி வேண்கோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,” அ.தி.மு.க,. இளைஞரணி செயலாளரை அனுப்புங்கள்; இருவரும் பிரதமர் இல்லத்தின் முன் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராடுவோம். அதில் வெற்றி கிடைத்தால் அதன் பெருமையை நீங்களே எடுத்து கொள்ளலாம்.” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.