மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், இந்த கால்பந்து திருவிழாவில் மகுடம் சூடப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது.


இந்த போட்டியில் பலமிகுந்த ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியும் நேருக்கு நேர் மோதின. இரு அணிகளிலும் பலமிகுந்த வீராங்கனைகள் இருந்ததால் கோப்பையை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது, போட்டியை காண மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.


முன்னிலை பெற்ற ஸ்பெயின்:


பெரும் பரபரப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த போட்டியில் இரு அணி வீராங்கனைளும் போட்டி தொடங்கியதும் எதிர் அணிகளின் கோல் வளையத்தை மாறி, மாறி முற்றுகையிட்டனர். ஆனால், கோல் வளையத்தில் பந்து செல்லாத நிலையில், சரியாக ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் கேப்டன் ஓல்கா அபாரமாக கோல் அடித்தார். இதனால், ஸ்பெயின் அணி ஆட்டத்தில் 1-0 என்று முன்னிலை பெற்றது.


ஸ்பெயின் கோல் அடித்தால் இங்கிலாந்து வீராங்கனைகள் பதில் கோல் திருப்ப போராடினார். அவர்களுக்கு கிடைத்த சில வாய்ப்பை அவர்கள் கோலாக்க தவறினர். இங்கிலாந்து வீராங்கனைகள் போராடியும் முதல் பாதியில் அவர்களால் எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதனால், முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என்று முன்னிலை பெற்றது.


 



( imagesource@TheAthleticFC)


இந்த நிலையில், இரண்டாம் பாதியில் கட்டாயம் கோல் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் இங்கிலாந்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரின் ஆலோசனைக்கு பிறகு களமிறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் தாக்குதல் ஆட்டத்தை நடத்தினர். கோல் வளையத்தை அவர்கள் இரண்டு, மூன்று முறை முற்றுகையிட்டாலும் அவர்களால் அதை கோலாக மாற்ற முடியவில்லை.


போராடிய இங்கிலாந்து:


அதேநேரத்தில் ஸ்பெயின் அணியும் இரண்டாவது கோலை அடிக்க மாறி, மாறி முயற்சித்தனர். இந்த நிலையில், இங்கிலாந்து வீராங்கனையின் கையில் பட்டதால் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியில் அடித்த பந்தை மிக அபாரமாக இங்கிலாந்து கோல்கீப்பர் இயார்ப்ஸ் பாய்ந்து அப்படியே கேட்ச் பிடித்தார்.


 



imagesource@Lionesses


பெனால்டி வாய்ப்பை தடுத்த பிறகு இங்கிஙாந்து வீராங்கனைகள் மிகவும் உத்வேகமாக ஆடினர். இந்த நிலையில், ஸ்பெயினின் முக்கிய வீராங்கனை கோடினா காயத்தால் வெளியேறினார். இங்கிலாந்து வீராங்கனை ஜேம்ஸ் அனுப்பிய பந்தை ஸ்பெயின் கோல்கீப்பர் அற்புதமாக தடுத்ததால் முதல் கோல் அடிக்கும் வாய்ப்பு இங்கிலாந்திற்கு பறிபோனது.


இந்த நிலையில், இங்கிலாந்து வீராங்கனை கிரீன் பந்தை தலையால் அடித்தபோது அவரது தலையில் காயம்பட்டு ரத்தம் வழிந்தது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


மகுடம் சூடிய ஸ்பெயின்:


இங்கிலாந்து பயிற்சியாளரும் வீராங்கனைகளை கடைசி கட்டத்தில் மாற்றிப்பார்த்தார். ஆனாலும், பலன் அளிக்கவில்லை. பின்னர், காயம், வீணடித்த நேரம் ஆகியவற்றை ஈடுகட்ட கூடுதலாக 13 நிமிடங்கள் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீராங்கனைகள் சீறிப்பாய்ந்து கோல் அடிக்க முயற்சிக்க, அதை இங்கிலாந்து கோல்கீப்பர் இயார்ப் தடுத்தார்.


ஸ்பெயின் கோல் வளையத்திற்குள் இங்கிலாந்து வீராங்கனைகள் பந்தை கொண்டு சென்றாலும், அதை ஸ்பெயின் வீராங்கனைகள் தட்டிப்பறித்தனர். கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் ஆடிய இங்கிலாந்து அணி கடைசி வரை போராடியும் பதில் கோல் அடிக்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் ஸ்பெயின் கோல்கீப்பர் தடுக்க, மகளிர் கால்பந்து உலகக்கோப்பை சாம்பியனாக ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.


தோல்வியடைந்த இங்கிலாந்து அணி மைதானத்திலே கண்ணீர் வீட்டனர். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஸ்பெயின் வீராங்கனைகளும், ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர்.