வாழை 


மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது . குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.


சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. 


வாழை திரைப்பட வசூல்


மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறு பெருமாள் , கர்ணன் , மாமன்னன் ஆகிய மூன்று படங்களும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தை அவர் இயக்கி வருகிறார். இதற்கிடையில் தான் தனது முதல் படமாக இயக்க நினைத்த வாழை கதையை சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் இயக்கியிருக்கிறார். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் , கமல்ஹாசன் , இயக்குநர் மணிரத்னம் , ஷங்கர் உள்ளிட்டவர்கள் பாராட்டினார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் இப்படத்தைப் பார்த்து மாரி செல்வராஜூக்கு தன் பாராட்டுகளை தெரிவித்தார். 


வாழைத் திரைப்படம் முதல் நாளில் 1.15 கோடி வசூலித்திருந்தது. அடுத்தடுத்த நாட்களில் இந்த வசூல் அதிகரிக்க படம் மிகப்பெரிய வெற்றியாக தெரிவிக்கப்பட்டது. தற்போதுவரை மொத்தம் 13 நாட்களில் வாழைத் திரைப்படம் உலகளவில் 35 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 






விஜய் நடித்த தி கோட் படம் நேற்று செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகியது. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த திரையரங்குகளும் தி கோட் படத்தின் காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகின. இப்படியான சூழலில் வாழைத் திரைப்படத்தின் காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லானதாக படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மக்களை கவரும் கதைக்களம் இருந்தால் சின்ன பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தை எடுத்து வெற்றிபெற செய்ய முடியும் என்பதை மாரி செல்வராஜ் நிரூபித்து காட்டியிருக்கிறார். 




மேலும் படிக்க : Nivin Pauly: வெளியானது முக்கிய ஆதாரம்! நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டில் புது ட்விஸ்ட் - சூடுபிடிக்கும் விசாரணை