விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு, அவருடைய தந்தையின் கண்கள் அப்படியே உள்ளதாகவும், அவரை வைத்து ரமணா 2 படத்தை எடுக்க விரும்புவதாகவும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.

சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்‘ பட இசை வெளியீடு

விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘படை தலைவன்‘. ஏற்கனவே சகாப்தம், மதுரை வீரன் படங்களில் நடித்துள்ள அவரது 3-வது படம் இது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை யு. அன்பு இயக்கியுள்ளார். இந்த படத்தில், ராகவா லாரன்ஸ், கஸ்தூரி ராஜா, ஏ. வெங்கடேஷ், எம்.எஸ். பாஸ்கர், ஸ்ரீஜித் ரவி, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், புதுமையான திரைக்கதையுடன், முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்துடன், த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 23-ம் தேதி திரைக்கு வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(15.05.25) நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியது என்ன.?

‘படை தலைவன்‘ இசை வெளியீட்டு விழாவில், ஹிட் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், ஏராளமான படங்களில், ஹீரோவிற்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் ட்ரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான் என்று கூறினார். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும் என்றும், அதை விஜயகாந்த் செய்தார் என்றும் குறிப்பிட்டார்.

விழாவில் எல்லோரும் விஜயகாந்த் குறித்து பேசியிருப்பார்கள், ஆனால், அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது என பெருமிதம் தெரிவித்தார் ஏ.ஆர். முருகதாஸ். மேலும், தான் மட்டும் தான் விஜயகாந்த்துடன் பணியாற்றியதாக நினைத்ததாகவும், ஆனால், இயக்குநர் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாக கூறியபோது சற்று பொறாமையாக இருந்ததாகவும் கூறினார்.

சண்முக பாண்டியன் குறித்து பேசிய ஏ.ஆர். முருகதாஸ்

தொடர்ந்து பேசிய ஏ.ஆர். முருகதாஸ், விஜயகாந்த்தின் விடாமுயற்சியும் கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும் என்று அறிவுரை கூறினார். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களை(சண்முக பாண்டியன்) கைவிட மாட்டார்கள் என்று கூறிய அவர், இவ்வளவு கம்பீரமான நடிகர் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளதாக பாராட்டினார்.

மேலும், விஜயகாந்த்தின் கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு இருப்பதாகவும், சினிமாவில் வளர்ந்து வாருங்கள், கண்டிப்பாக ரமணா 2 படம் எடுக்கலாம், மீண்டும் கேப்டனை திரையில் காண்போம் என்று கூறி சண்முக பாண்டியனை வாழ்த்தினார், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

திரையுலகில் மெல்ல மெல்ல வளர்ந்துவரும் சண்முக பாண்டியனுக்கு ஒரு எனர்ஜி பூஸ்ட் கொடுப்பது போல் இந்த வார்த்தைகள் உள்ளன. இது, நிச்சயம் அவருக்கு பெரும் உந்துதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.