நடிகைகளுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த மலையாள திரையுலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அந்த மாநில பிரபல நடிகர்களான முகேஷ், ஜெயசூர்யா, சித்திக் என அடுத்தடுத்து பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
நிவின்பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு:
இந்த சூழலில், பிரேமம் படம் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் நிவின்பாலி மீது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது நிவின் பாலி ரசிகர்களுக்கும் மலையாள திரையுலகிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் நிவின்பாலி, தான் குற்றமற்றவன் என்றும், அதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்றும் கூறியிருந்தார். நிவின் பாலி மீது குற்றம் சாட்டியிருந்த பெண் கடந்தாண்டு(2023) டிசம்பர் 15ம் தேதி துபாயில் தன்னை நிவின்பாலி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
வெளியானது முக்கிய ஆதாரம்:
ஆனால், அந்த பெண்ணின் குற்றச்சாட்டு போலி என்று கூறும் வகையில் நிவின்பாலி அதே தினத்தில் கேரளாவின் கொச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியிருந்ததற்கான ரசீது வெளியிடப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள பிரபல ஓட்டலான கிரவுன் பிளாசா ஹோட்டலில் கடந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி 2.30 மணி முதல் டிசம்பர் 15ம் தேதி மாலை 4.30 மணி வரை தங்கியிருந்ததற்கான ரசீதை ஓட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மேலும், நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசன் குற்றம் சாட்டப்பட்ட நேரத்தில் நிவின்பாலி தன்னுடன்தான் ஓட்டலில் தங்கியிருந்ததாகவும், அவர் அப்போது வருஷங்கள்க்கு சேஷம் என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அதன் படப்பிடிப்பு கொச்சியில் உள்ள எர்ணாகுளம் வணிகவளாகத்தில் கடந்தாண்டு டிசம்பர் 15ம் தேதி மதியம் 3 மணி வரை நடைபெற்றதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பார்மா என்ற வெப்சீரிசிற்கான படப்பிடிப்பிலும் நிவின் பாலி பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிவின்பாலி மற்றும் 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலையாள திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.