கோலிவுட்டில் அதிகமாக பேசபட்டு வருவது ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் விவகாரம் தான். ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துவிட்டு கெனிஷா உடன் ரவி மோகன் பழகி வருவது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ஆதங்கத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு இப்போது ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் இருவரும் அடுத்தடுத்து அறிக்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். ஜெயம் படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பெரும்பாலும் தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் கெனிஷா ரூபத்தில் பிரிவு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்தார். அதோடு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி பிரிவிற்கு பாடகி கெனிஷா தான் காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், ரவி மோகன் அப்படியெல்லாம் கிடையாது. கெனிஷாவை தன்னுடைய தோழி என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் பிரீத்தா திருமண வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சியில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். மேலும், இருவரும் ஒரே கலரில் உடை அணிந்து கலந்து கொண்டனர். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் பலரும் ஆர்த்திக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இச்சம்பவத்திற்கு பிறகு ஆர்த்தி ஆதங்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஆர்த்தி. அதில், நான் இப்போதும் ரவி மோகன் மனைவி தான். இன்னும் எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை. இத்தனை காலமாக நான் பொறுமையாக இருந்துவிட்டேன். அதற்கு காரணம் என்னுடைய மகன்கள் தான் என்று கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தான் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் இப்போது மாறி மாறி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
முதலில் ரவி மோகன் 4 பக்க நீளத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இத்தனை ஆண்டுகாலமாக நான் முதுகில் குத்தப்பட்டிருந்தேன். இப்போது நெஞ்சில் குத்தப்பட்டது ரொம்பவே சந்தோஷம். முன்னாள் மனைவியை விட்டு விலக முடிவு செய்தேனே தவிர, மகன்களை விட்டு விலக முடிவு செய்யவில்லை. அவர்களுக்காக நான் எல்லாவற்றையும் செய்வேன். கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய சம்பளத்தை கூட அப்பா அம்மாவிற்கு கொடுக்க முடியவில்லை. அந்தளவிற்கு நான் மறுக்கப்பட்டிருக்கிறேன். எனது அமைதிக்கும், பொறுமைக்கும் எல்லை இருந்தது. இனிமேலும் அமைதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
எனக்கு உறுதுணையாக நின்றவர் தான் கெனிஷா. என்னுடைய வாழ்க்கையில் நான் அனுபவித்த எல்லா பிரச்சனைக்கும் எனக்கு ஆறுதலாக இருந்தார். எனக்கு மனநல ஆலோசகராக இல்லாமல் ஒரு தோழியாக என்னுடன் இருந்தார். எந்த ஆதரவும் இல்லாமல் நின்ற போது என்னுடைய வாழ்க்கையில் ஒளி வீசியவர் தான் கெனிஷா. அவரை அவமதிக்கும் எதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. கெனிஷா தைரியமானவர். வெளிப்படையாக பேசும் குணம கொண்டவர். அவரைப் பற்றி சமூக வலைதளங்களில் பேசப்படும் எல்லா விஷயங்களை படித்த போது நான் வருத்தப்பட்டேன். உங்களைப் பற்றி எனக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருப்பதால் சமூக வலைதளங்களில் பகிரப்படும் விஷயங்கள் யாவும் உண்மை இல்லை என்று சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அடுத்த சில நொடிகளிலேயே கெனிஷா பிரான்சிஸூம் தன் பங்கிற்கு இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அதில் ரவி மோகன் பகிர்ந்த பதிவை குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். நன்றி சகோதரரே. எப்போதும் கதைக்கு ரெண்டு பக்கம் இருக்கும். ஒரு பக்கம் இருட்டாக இருந்தால் மறுபக்கம் வெளிச்சமாக இருக்கும். அப்படிப்பட்ட வெளிச்சத்திற்கு வருவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். என்ன நடக்க போகிறது என்று யாருக்கும் தெரியாமல் இருக்கும் போது அது இப்படித்தான் நடக்க போகிறது என்ற ஒரு அனுமானத்திற்கு எல்லோருமே வந்துவிடுகிறார்கள். உங்களுடைய ஆதரவும், புரிதலும் எனக்கு கிடைத்ததற்கு நன்றி. உங்களது வார்த்தைக்கும், வாழ்த்துக்களுக்கூம் நன்றி என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.