மன்சூர் அலிகான், அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
குவிந்த கண்டனங்கள்:
பின்பு அமைச்சர் ரோஜா, கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.இதனையடுத்து மன்சூர் அலிகான் அளித்த விளக்கத்தில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. இதனையடுத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் தான் திரிஷாவை பாராடிப் பேசினதாக மன்சூர் அலிகான் தெரிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், உள்ளிட்ட திரைத்துறை சம்பந்தமான சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
த்ரிஷாவை மதிக்கிறேன்:
இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். ஆஜராக அவகாசம் கேட்டு மன்சூர் அலிகான் காவல்துறைக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், அவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று காவல் நிலையத்தில் தான் விளக்கம் அளித்ததாக தெரிவித்தார். த்ரிஷாவை நடிகையாக மதிப்பதாகவும், தனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
Suriya Injured: திடீரென விழுந்த கேமரா.. நடிகர் சூர்யாவுக்கு காயம்.. கங்குவா ஷூட்டிங்கில் விபத்து..!
TN Headlines: வலுவடைந்த பருவமழை; முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார் - முக்கிய செய்திகள்