Uttarakhand Tunnel Rescue LIVE: மாலைக்குள் 41 பேரும் மீட்கப்படுவார்களா? எப்போது தொடங்குகிறது டிரில்லிங் பணி?
Uttarakhand Tunnel Rescue Ops Live: உத்தர்காசி சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் மீட்பு நடவடிக்கை குறித்த அனைத்து சமீபத்திய அறிவிப்புகளுக்கும் இந்த பக்கத்தைப் பின்தொடரவும்.
”காலை 11-11:30 மணிக்குள் துளையிடும் பணியை தொடங்குவோம் என்று நம்புகிறோம். அடுத்த 5 மீட்டருக்கு எந்த உலோகத் தடையும் இல்லை என்று நிலத்தடி ஊடுருவல் ரேடார் ஆய்வு காட்டுகிறது,என பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே, உத்தரகாசி பகுதியில் ஆய்வு நடத்திய பிறகு தெரிவித்துள்ளார்.
”துளையிடும் ஆகர் எந்திரம் நன்றாக செயல்படுகிறது. அடுத்த 5 மீட்டர் எந்த உலோக அடைப்புகளும் இல்லாததால் எளிதாக துளையிட முடியும்” என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் காலை 11.30 மணிக்கு டிரில்லிங் பணி மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துளையிடும் இயந்திரத்தின் கான்க்ரீட் அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து மீட்பு பணி தீவிரம். இதன் காரணமாக உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆஜர் துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் தோண்டும் பணி நேற்று நிறுத்தப்பட்டது. இதுவரை சில்க்யாரா சுரங்கப்பாதையில் மீட்புப் படையினர் 46.8 மீட்டர் தூரம் வரை துளையிட்டுள்ளனர்.
துளையிடும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை, சில்கியாரா சுரங்கப்பாதையில் 46.8 மீட்டர் தூரம் வரை மீட்புப் படையினர் துளையிட்டுள்ளனர்.
"இடிபாடுகளை செங்குத்தாக துளையிட அனைத்தும் தயாராக உள்ளது. அனைத்து தளங்களிலும் தயார். சாலைகள் தயார். எல்லாம் தயார். எப்படி செங்குத்தாக துளையிட போகிறோம் என்பது பற்றி முடிவு சிறிது நேரத்தில் எடுத்துவிடுவோம். ஆனால், வெவ்வேறு வழிகள் இருக்கின்றன. அனைத்தும், ஒன்றையொன்று பாதிக்கின்றன. நாம் துளையிடும் போது, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செங்குத்தாக துளையிடலாமா? வேண்டாமா? என்ற கேள்வியே பிரதானமாக உள்ளது" என சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.
சில்கியாராவில் மீட்பு பணி நடைபெற்று வரும் இடத்துக்கு தெய்வ சிலை ஒன்றை உள்ளூர் மக்கள் கொண்டு வந்துள்ளனர்.
உத்தர்காசி சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், அடுத்த சில மணி நேரத்திலோ அல்லது நாளையோ மீட்கப்படுவார்கள் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினரும் லெப்டினன்ட் ஜெனரலுமான சையத் அட்டா ஹஸ்னைன் தகவல் வெளியிட்டுள்ளார்.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நலம் விசாரித்துள்ளார்.
மீட்புப் பணி குறித்து பேசிய எய்ம்ஸ் மருத்தவர் நரிந்தர் குமார், "தேவைப்பட்டால், மீட்கப்பட்டவர்களை ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரும் திட்டம் உள்ளது. உத்தரகாசியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. அவர்கள் முதலில் அங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் இங்கு செய்துள்ளோம். அவர்களுக்கு காயம், ஐசியூ படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன" என்றார்.
என்.டி.ஆர்.எஃப்., டிஜி அதுல் கர்வால் கூறுகையில், "ஆஜர் இயந்திரம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. 6 மீட்டர் நீளமுள்ள 2-3 குழாய்களை உள்ளே அனுப்ப உள்ளோம். எங்களுக்கு எந்த தடையும் ஏற்படவில்லை என்றால், இன்றைக்குள் மீட்பு நடவடிக்கை நிறைவடையும் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களை மீட்க தரணி ஜியோ டெக் நிறுவனத்தை அணுகி மீட்புக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
சிக்கிய தொழிலாளியின் குடும்ப உறுப்பினர் சஞ்சல் சிங் பிஷ்ட் கூறுகையில், "என் உறவினர் உள்ளே இருக்கிறார். அவர் இன்று வெளியே வருவார் என நம்புகிறேன். நான் அவருடன் உரையாடினேன். அவர் என்னை வீட்டிற்கு செல்லச் சொன்னார். அவர் நன்றாக இருக்கிறார் என்று கூறினார்” எனத் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து வெல்டிங் நிபுணர்கள் சுரங்கப்பாதையில் உள்ள எம்எஸ் பைப்பை வெல்டிங் செய்யும் இடத்திற்கு வந்துள்ளனர். "சுரங்கப்பாதைக்குள் எம்எஸ் பைப்பை வெல்ட் செய்வதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஐந்து வெல்டர்கள் இங்கு வந்துள்ளனர். வெல்டிங் இயந்திரத்தின் உதவியுடன் அதைச் செய்வோம்" என்று வெல்டர் ராதே ராமன் துபே செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் வெளியே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மீட்புப் பகுதியில் ஆம்புலன்ஸ்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க அருகிலுள்ள மருத்துவமனையில் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
சுரங்கப்பாதைக்கு வெளியே ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. (Image Source: PTI)
மருத்துவமனையில் படுக்கைகள் தயார் (Image Source: PTI)
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மீட்பு பணியின்போது இடையில் ஏகப்பட்ட கம்பிகள் உள்ளதால் மீட்பது சவாலாக இருக்கிறது என்றும், இன்று காலை மணிக்குள் மீட்பு பணியை முடிக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மருத்துவ உபகரணங்கள் சம்பந்தப்பட்ட இடத்தை அடைந்துள்ளது.
உத்திரகாண்ட் மாநிலத்தில் உத்திரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியது.
உத்தரகாசி மாவட்ட நீதிபதி அபிஷேக் ருஹெலா, சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் நடந்த இடத்திற்கு வந்து பணிகளை பார்வையிட்டார்.
மீட்புப் பணிக் குழுவில் ஒருவரான கிரீஷ் சிங் ராவத் கூறுகையில், "மீட்புப் பணி கிட்டத்தட்ட கடைசி கட்டத்தில் உள்ளது. இன்னும் 1-2 மணி நேரத்தில் முடிவு வரும் என்று நம்புகிறேன். பணியாளர்களை வெளியேற்ற குழாய் பதிக்கப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கிய இரும்புத் துண்டுகள் வெட்டி அகற்றப்பட்டன" எனத் தெரிவித்தார்.
சில்க்யாரா மீட்பு பணி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தொழிலாளர்களை மீட்க NDRF குழு களமிறங்கியுள்ளது. சுரங்கப்பாதைக்குள் ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உடல்நலப் பரிசோதனைகளுக்காக மருத்துவர்கள் குழு சின்யாலிசூரில் நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரகாசியில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் இருக்கிறார்.
சிக்கிய தொழிலாளியின் சகோதரர் விக்ரம் கூறியதாவது: எனது தம்பி உள்ளே சிக்கியுள்ளான். நேற்று, அவருடன் பேசினேன். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. சாப்பிட உணவு கிடைக்கிறது. பழங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அம்மா அப்பாவைப் பற்றிக் கேட்டான்.
தேசிய தடுப்பூசி வேன் உத்தரகாசியில் இடிந்து விழுந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.
சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்புப் படையினர் நெருங்கி வரும் நிலையில், மருத்துவ உபகரணங்களுடன் ஆம்புலன்ஸ் சில்க்யாரா சுரங்கப்பாதை தளத்திற்கு வந்து சேர்ந்தது.
என்.டி.ஆர்.எஃப் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது. காலை 8 மணிக்கு முழு மீட்பு பணிகளும் நிறைவடையும் என நம்புவதாக மீட்பு குழு உறுப்பினர் ஹர்பால் சிங் தெரிவித்துள்ளார்.
Background
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நடைபெற்று கொண்டிருந்த சுரங்கப்பாதை பணியில் எதிர்பாராத விதமாக கடந்த நவம்பர் 12ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கப்பாதையில் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. அதில் பணியாற்றிய 41 தொழிலாளர்களும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் சிக்கிய 41 தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் பணிகள் வியாழக்கிழமையான இன்று 12-வது நாளாக நீடித்து வருகிறது. செவ்வாய்க்கிழமையான நேற்று முன் தினம் ஆறு அங்குல அகலமுள்ள புதிய குழாய் வழியாக எண்டோஸ்கோபி கேமாரா அனுப்பி அங்கு சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் உறவினர்கள் மத்தியில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் அவர்களுக்கு ஆக்சிஜனும் உணவும் அனுப்பப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் தொழிலாளர்கள் தங்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை ஹெல்மெட் அணிந்து குழாய் மூலம் தங்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு ஒருவருக்கொருவர் பேசுவதைக் காண முடிகிறது.
ஒரு திரையில் அவர்களைப் பார்க்கும் அதிகாரிகள் லென்ஸை சுத்தம் செய்யும்படி அறிவுறுத்துவதைக் கேட்க முடிந்தது. தொழிலாளர்கள் கேமராவுக்கு அருகில் வந்து வாக்கி-டாக்கிகளைப் பயன்படுத்தச் சொன்னார்கள்.
தொழிலாளர்களின் உறவினர்கள் அனைவரும் சுரங்கத்திற்கு அருகே முகாமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்கிழமை பேசி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். "அனைத்து தொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்பதே எங்கள் முதன்மையான முன்னுரிமை என்று பிரதமர் கூறினார்," என்று எக்ஸ் தளத்தில் தமி பதிவிட்டிருந்தார்.
புதிய குழாய் மூலம் தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்ட ஒரு மருத்துவர், அவர்களில் சிலர் சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு இருப்பதாக புகார் கூறியதாக பிடிஐ அறிக்கை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு எலக்ட்ரோலைட் பவுடர் பாக்கெட்டுகள், மல்டிவைட்டமின் மாத்திரைகள் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிகிறது. டெல்லியில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஹஸ்னைன், தொழிலாளர்களைக் காப்பாற்ற ஐந்து முனைகளில் ஒரே நேரத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். விரைவில் இந்த மீட்புப்பணி நிறைவடையும் எனத் தெரிகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -