கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சூர்யா நடிப்பில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் “எதற்கும் துணிந்தவன்” படம் வெளியானது. அதன்பிறகு கடந்த ஒன்றரை வருடங்களாக அவரின் படங்கள் எதுவும் வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இப்படியான நிலையில் சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


இப்படத்துக்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் நெருப்பு சக்தி கொண்டவர் மற்றும் மிகவும் வீரம் கொண்டவர் என்பது பொருளாகும். இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் கங்குவா படத்தில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு  வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் கங்குவா படத்தில் சூர்யா 13 விதமான தோற்றங்களில் நடிக்கிறார். 


இதனிடையே கங்குவா படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. இதில் சண்டை காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரோப்பில் கட்டப்பட்ட கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டை மேல் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சூர்யா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.