தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா(Manobala) கல்லீரல் பிரச்சினை காரணமாக காலமானார். அவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. 


தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் நடிகர் மனோபாலா(Manobala). இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் ரஜினி நடித்த ஊர்க்காவலன், ஆகாய கங்கை உள்ளிட்ட 20 படங்களை இயக்கியுள்ளார்.  இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கம்போல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார். 


மனோபாலாவின் சினிமா வரலாறு


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த மனோபாலா சிறுவயது முதலே சினிமா மீது தீராத மோகம் கொண்டிருந்தார். ஏதேதோ காரணங்களையெல்லாம் சொல்லி சென்னையில் உள்ள உறவுக்காரர் வீட்டில் தங்கி படங்கள் பார்ப்பதை வேலையாகவும், சினிமாவில் உதவி இயக்குநராகச் சேருவதை இலக்காகவும் கொண்டு செயல்பட்டார்.எப்படியோ கமல்ஹாசனின் நட்பு இவருக்கு கிடைத்துள்ளது. அதன்மூலம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேரும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதாவது பாரதிராஜாவிடம் பணியாற்றி வந்த பாக்யராஜ்  சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குநராக சென்று விடவே அந்த இடத்திற்கு வந்தவர் தான் மனோபாலா.


புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து இயக்குநராக முதன்முதலில் கார்த்திக், சுஹாசினி நடித்த ஆகாய கங்கை படத்தை இயக்கினார். இயக்குநராக பிள்ளை நிலா,ஊர்க்காவலன், என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், சிறை பறவை, மல்லுவேட்டி மைனர், கருப்பு வெள்ளை, நந்தினி, நைனா உள்ளிட்ட 20 படங்களை இயக்கியுள்ளார். 


ALSO READ | Manobala Death: நகைச்சுவை நடிகர் மனோபாலா மறைவு: சோகத்தில் ரசிகர்கள் - திரையுலகினர் இரங்கல்!


நடிகராக பயணம்


பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மனோபாலா, நட்புக்காக படத்தின் மூலம் முழுநேர நடிகராக மாறினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா, மாதவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.  மேலும் சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை 2 (இன்னும் ரிலீசாகவில்லை) ஆகிய படங்களை தயாரித்தார்.


மனோபாலா குடும்பம் 


சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த நடிகர் மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.  இப்படியான நிலையில் மனோபாலாவின் மரணம் தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ALSO READ | Manobala Directed Movies: சிவாஜி முதல் ரஜினி வரை... டாப் ஹீரோக்களை இயக்கியுள்ள மனோபாலா.. லிஸ்ட் இதுதான்!