தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்த மனோபாலா இன்று உடல் நலக்குறைவால் காலமானார். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த மனோபாலா, கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. 


அவரது மறைவிற்கு பல திரைபிரபலங்கள் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். 


இயக்குனர் மனோபாலா: 


தமிழ்சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்படும் மனோபாலா, ஒரு இயக்குனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். தமிழ் சினிமாவில் ஐகான்களான சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை இயக்கியுள்ளார். 


இயக்குனர் மனோபாலா இயக்கிய திரைப்படங்கள்: 


அன்னை (2000)
பாரம்பரியம் (1993) - (சிவாஜி கணேசன் , நிரோஷா , செந்தில்)
நந்தினி (1997)
முற்றுகை (1993)
செண்பகத்தோட்டம் (1992)
கருப்பு வெள்ளை (1993)
வெற்றி படிகள் (1991)
என்புருசன்தன் எனக்குமட்டும்தான் (1989)
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1991)
தென்றல்சுடும் (1989)
ஊர்காவலன் (1987) - (ரஜினிகாந்த், ராதிகா , ரகுவரன்)
பாரு பாரு பட்டணம் பாரு (1986)
நான் உங்கள் ரசிகன் (1985)
மூடு மந்திரம்  (1989)
சிறை பறவை (1987)
பிள்ளை நிலா (1985)
ஆகாய கங்கை (1982)


மேலும், தலா ஒரு ஹிந்தி, கன்னடம் மற்றும் டெலி பிலிம் என மொத்தம் 20 படங்களை இயக்கியுள்ளார். அதுபோக, மூன்று 3 தொலைக்காட்சி சீரியல்களையும் இயக்கியுள்ளார். 


பாரதிராஜாவின் சிஷ்யன்: 


நடிகர் கமல்ஹாசனின் சிபாரிசில் பாராதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் மூலம் உதவி இயக்குனராக மனோபாலா இணைந்தார். தொடர்ந்து கார்த்திக் முத்துராமன், சுஹாசினி நடிப்பில் வெளியான ஆகாயகங்கை படத்தின் மூலம் இயக்குனராக மாறிய மனோபாலா, அடுத்தப்படம் இயக்க 3 ஆண்டுகள் நேரம் எடுத்து கொண்டார்.