மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் - தேசிய விருது வென்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் ஆகியோரது மெகா கூட்டணியில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.
மல்யுத்த வீரராக மாஸ் காட்டும் மோகன்லால்
மது நீலகண்டன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தினைச் சேர்ந்த மல்யுத்த வீரராக இப்படத்தின் மோகன்லால் நடித்துள்ள நிலையில், மாஸாக இப்படத்தில் மோகன் லால் தோன்றும் காட்சி வெளியாகியுள்ளது.
மேலும் நாசர் குரலில் “கண்கண்டது நிஜம், காணாதது பொய்.. நீ கண்டதெல்லாம் பொய்.. இனி காணப்போவது நிஜம்” எனும் வசனங்களுடன் மோகன் லால் அமர்ந்திருக்கும் மாஸ் காட்சி வெளியாகியுள்ளது. ‘தக் லைஃப்’ படத்தின் கமல்ஹாசனின் அறிமுக டீசரைப் போல் மோகன்லால் இந்த டீசரில் மாஸாக தோன்றியுள்ளது அவரது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் உண்மையான மல்யுத்த வீரரின் வாழ்க்கையைத் தழுவி உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மோகன் லால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இப்படத்தினை எதிர்நோக்கி காத்துள்ளனர்.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி
மலையாள சினிமா தாண்டியும் தனக்கென தனி சினிமா ரசிகர்களைக் கொண்ட கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.
2017ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘அங்கமாலி டைரிஸ்’ கல்ட் சினிமாவாக உருவெடுத்து தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஈமாயு, ஜல்லிக்கட்டு, சுருளி என தன் அடுத்தடுத்த படங்களின் மூலம் கவனமீர்த்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.
முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் படத்தினை இவர் இயக்கிய நிலையில் அடுத்ததாக மற்றொரு மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் உடன் இந்த முறை கூட்டணி வைத்துள்ளார்.
நடிகர்கள்
முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங் நிறைவை ஒட்டி படக்குழு பகிர்ந்த வீடியோவும், மோகன் லாலின் கயிறு இழுக்கும்படியான மாஸ் காட்சியும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்தது.
சென்னை, ராஜஸ்தான், புதுச்சேரி என பல இடங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பரேடி, சஞ்சனா சந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஆண்டு மலையாள சினிமா எதிர்நோக்கி இருக்கும் முக்கியப் படங்களுள் ஒன்றாக இப்படம் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Archana: இவர் ஓவியா இல்ல ஜூலி.. பொம்மை டாஸ்க்கில் விசித்ராவிடம் வன்மம் கொட்டிய அர்ச்சனா.. அதிருப்தியில் ரசிகர்கள்!