முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் அண்ணா பூங்கா அருகே உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குறிப்பாக அதிமுக சார்பில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவரைத் தொடர்ந்து அமமுக சார்பில் சேலம் மாவட்ட செயலாளர் செல்வம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெங்களூர் புகழேந்தி, அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை ஒரு மாயையாக கொண்டு செல்கின்றனர். சசிகலாதான் பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றி போயஸ் கார்டன் சென்று அவரை அழைத்தார்கள். தற்போது பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்கிறார்கள் என்று கூறினார். மேலும், சசிகலா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார்கள் என நினைக்கிறேன் என்றும் கூறினார்.


ஓபிஎஸ் அதிமுக கொடியை பயன்படுத்த கோர்ட் தடை விதித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுக கொடியை யார் கட்ட வேண்டும் யார் கட்ட கூடாது என எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா? அதிமுக கொடிக்கு இவர்கள் தான் உரிமையாளர்கள் என இணையத்தில் பதிவேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருக்கா? என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமி போட்ட மனு தவறானது. விரைவில் நல்ல முடிவு வரும். இனி வரும் நாட்களில் நீதிமன்றங்கள் நியாயமான நீதிகளை வழங்கும் என நம்புகிறோம் என்றார். 



மேலும், நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் கூட்டணி உருவாகும். தேசிய கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். 40 தொகுதியிலும் களம் காண்கிறோம் என்று கூறினார். வரும் தேர்தலில் அதிமுக சின்னம் கேள்வி குறி தான். ஆர்.கே நகர் இடைத்தேர்தல் போல நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்தனி சின்னங்களை பயன்படுத்துவார்கள். கடந்த அதிமுக ஆட்சியின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது தான் சென்னை தற்போது வெள்ளக்காடானதுக்கு காரணம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் குழு அமைத்து விசாரணை நடத்தவில்லை. சென்னையில் ஒவ்வொரு பகுதியாக தண்ணீர் செல்ல வடி கால்வாய் அமைத்தால் மக்கள் எப்போதும் இந்த அரசை பாராட்டுவார்கள் என்றார்.