பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 65 நாள்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. மந்தமாகத் தொடங்கிய இந்த சீசனில் அனைவரும் ஆரம்பத்தில் இருந்தே திட்டம் வகுத்து விளையாடுவதை நோக்கி நகர்ந்தனர். இது ரசிகர்களை அயற்சியில் ஆழ்த்தி இலகுவாக ஒன்ற முடியாமல் செய்தது.
பிக் அப் ஆன சீசன் 7
ஆனாலும் 5 வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்கள் அதிரடியாக நுழைந்து மக்கள் கருத்துகளை உள்ளே சொல்ல, மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரேட்டிங்கில் முன்னேறியது. முந்தைய சீசன்களைப் போல் எண்டெர்டெய்ன்மெண்ட் இல்லாமல் வார்த்தைப் போர், தடுக்கி விழுந்தால் சண்டை, அடிதடி என ரணகளமாக இந்த சீசன் சென்று கொண்டிருக்கிறது.
மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில் தற்போது விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீணா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, கூல் சுரேஷ், நிக்சன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் இருக்கின்றனர்.
குழந்தைகள் Vs பொம்மை டாஸ்க்
நீண்ட நாள் ஆசைக்குப் பிறகு ஒரு வழியாக இந்த வாரம் விஷ்ணு கேப்டனாகியுள்ள நிலையில், தன் முன்கோபத்தைக் கட்டுப்படுத்தி விஷ்ணு கேப்டன்சி செய்வாரா என சக போட்டியாளர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கொடுக்கப்பட்ட குழந்தைகள் Vs பொம்மை டாஸ்க்கில் விசித்ராவிடம் வன்மத்தைக் கொட்டி அர்ச்சனா கேம் விளையாடியதாக நெட்டிசன்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
5 போட்டியாளர்கள் குழந்தைகளாகவும், 4 போட்டியாளர்கள் பொம்மைகளாகவும், மணி மற்றும் அனன்யா டீச்சர்களாகவும் இந்த டாஸ்க்கில் பர்ஃபார்ம் செய்ய, விசித்ரா சீக்ரெட் ஷேரிங் பொம்மையாக தன் பாத்திரத்தை செய்தார். அர்ச்சனா பார்பி டால் பொம்மையாக வலம் வர, குழந்தையாக வலம் வந்த போட்டியாளர் தினேஷூக்கு ‘அர்ச்சனா பொம்மை’ ஒதுக்கப்பட்டது.
கீ கொடுத்த தினேஷ்.. வன்மம் கொட்டிய அர்ச்சனா
இந்நிலையில், பார்பி டால் அர்ச்சனா பொம்மையை, அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை தவிர்த்து பிறரைப் பற்றி கருத்து சொல்லுமாறு தினேஷ் குழந்தையாக கோரிக்கை வைத்தார். அப்போது விசித்ரா பொம்மை பற்றி ‘குழந்தை தினேஷ்’ கருத்து கேட்க, “இந்த பொம்மை ஏதாவது தப்பு நடந்துடுச்சுனா அத கன்ஃபெஸ் பண்ணனும்னு நினைக்கற பொம்மை. கூட இருக்கவங்க கூட உரையாடல் நடத்தி அத கேமரா ரெக்கார்டு பண்ணுதானு செக் பண்ணிக்கும்” என்றெல்லாம் கூறினார்.
மேலும் “இந்த பொம்மை இந்த வீட்ல 60 நாள் இருந்தாலும் 61ஆவது நாள் கூட கேமரா கான்சியஸா இருக்கக்கூடிய பொம்மை. இந்த பொம்மை மக்கள் கிட்ட தன் கருத்த சேக்க மத்தவங்க கிட்ட உக்காந்து பேசும். இப்படி செஞ்சு தன் கருத்த மக்கள் கிட்ட கொண்டு சேப்பாங்க.
இந்த பொம்மை தன்ன பத்தி யாராவது விமர்சனம் வச்சா அத ஏத்துக்காம, “என்ன பாத்து ஏன் இப்படி சொன்ன?” என சண்டைக்கு போவாங்க. இன்னொருத்தர் ஏத்துக்கலனா அவங்களுக்கு தேவையில்லாம பேர் வச்சு முத்திரை குத்திடுவாங்க. இந்த பொம்மை தன்ன பத்தி யாராவது பின்னாடி பேசறதா தெரிஞ்சா என்ன பத்தி என்ன பேசுனனு மிரட்டி கேப்பாங்க” என வரிசையாக விசித்ராவிடம் தனக்கு இருந்த முரண்பாடுகளைக் கொட்டினார்.
கண்கலங்கிய விசித்ரா
மேலும் டாஸ்க் முடிந்த பின் விசித்ரா கண்கலங்கி அழ, தினேஷ் தான் தன்னை அவ்வாறு செய்ய வைத்ததாகவும், தான் விசித்ராவை நிறைய ஹர்ட் செய்ததாகவும் சொல்லி அர்ச்சனா வருந்தினார்.
இந்நிலையில் “தினேஷ் ஸ்விட்ச் தான் போட்டார்.. ஆனால் அர்ச்சனா என்னமோ தன் மனக்குமுறல்கலை எல்லாம் விசித்ராவிடம் கொட்டித் தீர்த்துவிட்டார். ஓவியா மாறி எல்லாம் அர்ச்சனா விளையாடவில்லை, ஜூலி மாதிரி இந்த 5 நிமிஷம் நடந்து கொண்டார். மக்கள் க்ளாப்ஸால் அர்ச்சனா இப்படி மாறிவிட்டார்” என்றெல்லாம் பிக்பாஸ் ரசிகர்கள் இணையத்தில் சரமாரியாக அர்ச்சனாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இணைந்த கைகளாக முந்தைய வாரங்களில் வலம் வந்த விசித்ராவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மனக்கசப்பு இருந்து வரும் நிலையில், இருவரும் பிரிந்து கருத்து வேறுபாடுகளுடன் கேம் விளையாடி வருவது இருவரது ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.