Rajinikanth: லால் சலாம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, தனது அப்பாவை சங்கி என விமர்சிப்பது வருத்தம் அளிப்பதாக கூறிய அதே மேடையில் இந்து மதம் குறித்தும், சனாதனம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். 

லால் சலாம்:


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படம் நாளை ரிலீசாக உள்ளது. படத்தில் மொய்தீன் பாயாக கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. 

 

இந்த நிலையில் அண்மையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “ அப்பாவை சங்கி சங்கின்னு சொல்றாங்க. எனக்கு புரியல. சங்கி என்றால் என்னன்னு கேட்டேன். அதுக்கு அரசியல் சார்ந்த சிலரை அப்படி கூப்பிடுவாங்க என்றனர். என் அப்பா ரஜினிகாந்த் சங்கி இல்லை. ரஜினிகாந்த் என்ற மனிதன் சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் இருக்கமாட்டார்.

 

சங்கி இந்த படத்தை பண்ண முடியாது. மனிதநேயமிக்க ஒருத்தரால் மட்டும் தான் இந்த படத்தில் நடித்திருக்க முடியும். வேற யாரும் இந்த கேரக்டரில் நடித்திருக்க மாட்டார்கள். அவரால் மட்டும் தான் இப்படி தைரியமாக நடிக்க முடியும். படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும்” என்று எமோஷனலாக பேசியுள்ளார். 

சனாதனம் என்றால் என்ன?


ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது, “ லால் சலாம் படம் மத நல்லிணக்கத்தை பேசியுள்ளது. மனிதன் கடவுளிடம் செல்ல வேண்டும், கடவுளை தெரிந்து வாழ்க்கையில் சந்தோஷமாக மாற மதங்கள் உருவானது. எல்லா மதங்களுக்கும் கிஸ்த்துவ மதம், இஸ்லாம் மதம் மற்றும் பவுத்த மதங்களுக்கு ஸ்தாபர்கள் இருந்தனர். அவர்களின் சீடர்கள் ஸ்தாபனம் செய்தனர். இந்து மதத்திற்கு மட்டும் ஸ்தாபர்கள் இல்லை.

 

சதானம் என்றால் புராதனம். அதாவது ஆதி. ரிஷிகளின் சப்தங்களே வேதமானது. வேதங்களை எளிதாக புரிந்து கொள்ள உபநிஷதங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த உபநிஷதங்களை எளிமையாக புரிந்து கொள்ள பகவத் கீதை கொண்டு வரப்பட்டது. பரமாத்மா ஜீவாத்மாவுடன் பேசுவது தான் பகவத் கீதை. இப்படி மதங்கள் எல்லாமே மக்களுக்கு நன்மை செய்யவே கூறுகிறது. கிஸ்துவம், இஸ்லாம், புத்தம் மற்றும் இந்து மதங்களில் உண்மை இருப்பதால் காலம் காலமாக இருந்து வருகிறது” என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.