2024ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ தகுதி படிப்புதவித்‌ தொகைத் திட்டத்‌ தேர்வுக்கு (என்எம்எம்எஸ்) விண்ணப்பிக்க நாளை (பிப்.9) கடைசித் தேதி ஆகும். 


நாடு முழுவதும் விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. 2008 முதல் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.


மாதாமாதம் ரூ.1000


இதற்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்- National Means Cum Merit Scholarship Scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 


இந்தத் தொகை மொத்தம் நான்கு ஆண்டுகளுக்கு, வழங்கப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.48 ஆயிரம் வழங்கப்படும்.


55 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம்


எனினும் 10ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, அடுத்த ஆண்டுக்கு உதவித் தொகை வழங்கப்படும். எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு.


இந்த நிலையில், தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (பிப்.9) கடைசித் தேதி ஆகும். மாணவர்கள் https://scholarships.gov.in/fresh/loginPage என்ற இணைப்பை க்ளிக் செய்து, உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.


முக்கியத் தேதிகள்


ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் வருமானத்தைக் காட்டிலும் குறைவாக ஈட்டும் பெற்றோரின் குழந்தைகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல்கட்டமாக பள்ளி அளவில் அதிகாரி, இதைப் பரிசோதிப்பார். தொடர்ந்து இரண்டாவது கட்டமாக, மாவட்ட அளவிலான அதிகாரி பரிசோதித்து, விண்ணப்பங்களை ஏற்பார். முதல்கட்ட சரிபார்ப்புக்கு பிப்.15 கடைசித் தேதி ஆகும் இரண்டாம் கட்ட சரிபார்ப்புக்கு பிப்.26 கடைசித் தேதியாக உள்ளது.


தேசிய வருவாய் வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ திட்டத்‌ தேர்வு உதவித் தொகை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/NMMSSGuidelines.pdfஎன்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


முழு விவரங்களுக்கு: https://scholarships.gov.in