லால் சலாம்
3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடித்த ’வை ராஜா வை’ படத்தை இயக்கினார். இதற்கு அடுத்து சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் இயக்கியிருக்கும் படம் ’லால் சலாம்’. விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா சனில்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். மேலும் தனது தந்தை ரஜினிகாந்தை முதல் முறையாக இப்படத்தில் இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா. நாளை பிப்ரவரி 9ஆம் தேதி திரைக்கு வெளியாகும் லால் சலாம் படம் குறித்து சில தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
7 ஆண்டுகள் இடைவெளி
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குவதைக் குறித்து பேசிய அவர் “ மீனுக்கு நீந்த சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. நான் மீன் தொட்டியில் நிந்த விரும்பினேனா, இல்லை கடலில் நீந்த விரும்பினேனா என்பது தான் இப்போது கேள்வி. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான விஷ்ணு ரங்கசாமி என்னிடம் இரண்டு கதைகள் சொன்னார். ஒன்று காதல் கதை, இன்னொன்று லால் சலாம். இந்தப் படத்தின் கதை எனக்கு சவாலானதாகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதால் நான் இந்த கதையை தேர்வு செய்தேன். இந்த நாட்டின் குடிமகனாக உங்களிடம் ஒரு ஆதார் அட்டை இருக்கிறது என்றால், நிச்சயம் இந்த நாட்டின் அரசியலில் உங்களுக்கு ஒரு பங்கு இருக்கிறது. லால் சலாம் படம் மக்களின் அரசியலை பேசும் படம்” என்று அவர் கூறினார்.
என் படத்தில் அப்பா நடிப்பதை விரும்பவில்லை
ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து பேசிய அவர் “3 படத்தை இயக்கும்போதே என்னுடைய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. எப்போதும் என்னுடைய பதில் இல்லை என்பதாக தான் இருந்திருக்கிறது. சில கதைகள் தன்னை முழுமையாக்கிக் கொள்ள அதற்கு தேவையான பாகங்களை சேர்த்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன். ஒரு கதை மிகத்தீவிரமான கருத்தை தனக்குள் வைத்திருக்கும் போது அது தனக்கான தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்கிறது. என்னுடைய தந்தை மற்றும் இந்தப் படத்தில் நடித்த பிற நடிகர்கள் அப்படிதான் இந்தப் படத்தில் வந்து சேர்ந்தார்கள்.
இஸ்லாமிய கதாபாத்திரம்
மொய்தீன் பாய் தீவிர கடவுள் நம்பிக்கையும் கொள்கையும் உடைய ஒரு கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு கருத்தை அவர் சொன்னா அது மக்களிடம் பரவலாக சென்று சேரும் என்று அவர் நம்புகிறார்.
“மேலும், இந்தப் படத்தில் ஒரு முக்கியமான மெசேஜ் இருக்கிறது. தென் தமிழ்நாடு முழுவதும் நான் சென்றுவந்தபோது அங்கு இருக்கும் மக்கள் மனதில் ஒரே கருத்து தான் இருந்தது. அவர்கள் அதை வெளிப்படையாக பேசத் தயங்கினார்கள்.
இந்தப் படத்தைப் பார்த்து அவர்கள் அதை வெளிப்படையாக பேச முன்வந்தார்கள் என்றால் எனக்கு மகிழ்ச்சிதான். இந்தப் படம் எந்த விதமான கொள்கைக்கு எதிரான ஒரு படம் இல்லை” என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.