Jailer: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திரையரங்கிற்கு சென்று ஜெயிலர் படத்தை பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வசூல் வேட்டையில் ஜெயிலர்:
கடந்த 10ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரித்து இருக்கும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
மகனின் மரணத்துக்கு காரணமான சிலை கடத்தல் குழுவை பழுவாங்க கிளம்பும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் கதை தான் ஜெயிலர் படம். படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளார் ரஜினி. படம் வெளியான 5 நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு, சுதந்திர தினம் விடுமுறையால் ஜெயிலர் படம் பார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
கேரள முதலமைச்சர்:
ஜெயிலர் படத்தை திரைபிரபலங்கள் பார்த்து கொண்டாடி வரும் நிலை முதலமைச்சர்களும் பார்த்து தங்கள் பங்கிற்கு படக்குழுவை வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு, அதில் நடித்திருந்த ரஜினியை பாராட்டி இருந்தார். முதலமைச்சரின் பாரட்டுக்கு இயக்குநர் நெல்சன் நன்றி தெரிவித்து டிவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயின் விஜயன் திரையரங்கிற்கு சென்று ஜெயிலர் படத்தை பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. தனது பிசியான நேரத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் பார்த்ததை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவில் மட்டும் ஜெயிலர் படத்தின் மூன்றாவது நாளாக ரூ.127.1 கோடி வசூலாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.58.3 கோடியும், கேரளாவில் ரூ.16.85 கோடியாகவும், கர்நாடகாவில் ரூ.22.65 கோடியாகவும் ஜெயிலர் படத்தின் வசூல் உள்ளது. அதேநேரம் மூன்றாவது நாளாக உலகம் முழுவதுமாக ஜெயிலர் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியதாக பாக்ஸ் ஆபிஸ் கணிப்புகள் கூறுகின்றன.
மேலும் படிக்க: ரகுவரனின் இறுதிச்சடங்கில் ரஜினிகாந்த் பங்கேற்காதது ஏன்..? இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பதில்..!