தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு வடிநிலக்கோட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்தின் கீழ் அய்யநேரி, கீழ்நாட்டுக்குறிச்சி, மேலக்கரந்தை, அயன்வடமலாபுரம், சின்னூர், மேல்மாந்தை போன்ற 29-க்கும் மேற்பட்ட பாசன கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் உள்ள நீரை நம்பி பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகின்றன.
கண்மாய் நீர்:
இந்த கண்மாயில் சேமிக்கப்படும் நீரை பயன்படுத்த, மடைகள், வரத்துக்கால்வாய்களை பராமரிக்க, நீர்ப்பிடிப்பு பகுதியில் தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீரை சேமிக்க, அந்த நீரை முறையாக பாசனத்துக்கு பயன்படுத்த, வயல்களுக்கு செல்லும் கால்வரத்துகளை பராமரித்தல் போன்ற பணிகளை செய்ய ஒவ்வொரு பாசன கண்மாய்க்கும் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
தூர்வாராத கண்மாய்கள்:
தமிழ்நாடு அரசின் குளம் மராமத்து பணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு பாசன கண்மாய்க்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எட்டயபுரம் வட்டம் கீழ்நாட்டுக்குறிச்சி பாசன கண்மாயில் சுமார் 1200 ஏக்கர் நிலம் ஆயக்கட்டாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கீழ்நாட்டுக்குறிச்சி கண்மாய் முறையாக தூர்வாரப்படாததால் நீர்பிடிப்பு பகுதி மண்மேடாகிவிட்டது.
மேலும், முதல், கடை, ஊடு ஆகிய 3 மடைகளும் கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் மழைக்காலங்களில் கண்மாயில் சேமிக்கப்படும் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் பழுதடைந்த மடைகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண்மேடாகி கிடக்கும் கண்மாயை தூர்வாரவும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
அதிகாரிகள் பதில்:
இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, ஒவ்வொரு முறையும் நாங்கள் கோரிக்கை வைக்கும் போதும், தற்போது நிதி நிலை சீராக இல்லை. நிதி நிலை சரியானவுடன் முன்னுரிமை அடிப்படையில் மடைகள் மற்றும் கண்மாய்கள் தூர்வாரப்படும் என அதிகாரிகள் பதில் அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கண்மாயின் கரையில் உள்ள வேலிக்கருவை மரங்களை அகற்றி கரைப்பலப்படுத்துவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அப்போது விவசாயிகள் அடிப்படை கோரிக்கைகளான மடைகளை சீரமைக்காமல் கரையில் உள்ள வேலி மரங்களையும், கரையையும் எந்தவித பலனும் இல்லை.
அதனால் முதலில் மடைகளை சீரமைக்க வேண்டும் என நாங்கள் கூறினோம். ஆனால், கரைகளை சீரமைக்க ஏற்கெனவே திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டதால், தற்போது எதுவும் செய்ய முடியாது. வரக்கூடிய ஆண்டில் கோடை காலத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மடைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விளாத்திகுளம் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் தெரிவித்திருந்தார்.
ஏமாற்றத்தில் விவசாயிகள்:
இந்த கோடையில் நிச்சயமாக மடைகளை சீரமைத்துவிடுவார்கள் என நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கீழ்நாட்டுக்குறிச்சி கண்மாயில் மீண்டும் கரைகளை உள்ள வேலி மரங்களை அகற்றி கரையை பலப்படுத்துவதற்கு இயந்திரங்கள் மூலம் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே கடந்த 3 ஆண்டுகளாக மடைகளை சீரமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர், விருதுநகர் வைப்பாறு வடிநில கோட்ட செயற்பொறியாளரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால், எங்களின் கோரிக்கையை ஏற்காமல் கடந்த ஆண்டைபோலவே கரையில் உள்ள வேலி மரங்களையும், கரையை மேம்பாடு பணிகளையே செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு துளிக்கூட பயனில்லை. கண்மாயின் நீர்ப்பிடிப்பு பகுதி மேடாக உள்ளது. தூர்வாரவும் இல்லை. மடைகளை சீரமைக்கவும் இல்லை. இதனை செய்யாமல் கரைகளை பலப்படுத்துவதால் எந்த பயனுமில்லை. அதிகாரிகள் முறையாக திட்டமிடுதலுக்கு முன்பு நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திடம் கலந்தாலோசிப்பதுமில்லை. விவசாயிகளின் கோரிக்கையை காது கொடுத்து கேட்பதுமில்லை. இதுபோன்ற நிலை தான் நீர்வள ஆதாரத்துறையில் உள்ளது.
எந்தவொரு பணியையும் நீர்வளத்துறை அதிகாரிகள் விவசாயிகளின் தேவைக்கேற்றவாறு செய்வதில்லை. தாங்களாக திட்ட மதிப்பீட்டை செய்து கொண்டு பணியை செய்து வருகின்றனர். இதனால், நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்ற தோற்றத்தில் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட பாசன கண்மாயில் வளர்ச்சி பணிகள் நடைபெறும்போது, நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தை கலந்தாலோசித்து செய்ய வேண்டும் என்பதே மரபு. அதனை வைப்பாறு வடிநிலக் கோட்ட அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட திட்டமதிப்பீடு என அதிகாரிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் மாறிக்கொண்டே உள்ளனர். ஒவ்வொரு முறையும் புதிதாக வந்தவர்களிடம் மனு அளித்து ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, ஆட்சியரின் சிறப்பு கவனம் செலுத்தி தனது விருப்ப நிதியின் கீழ் கீழ்நாட்டுக்குறிச்சி கண்மாயில் உள்ள மடைகளை சீரமைக்க வேண்டும் என்றார்.