வங்கிகளில் வாங்கும் கடனை விரைவாக கட்டி முடிப்பது மற்றும் வட்டி பணத்தை சேமிப்பது எப்படி என்பதற்கான சில ஆலோசனைகளை இந்த தொகுப்பில் அறியலாம்.


வங்கிக் கடன்:


அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெறுவது என்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து தனிநபர் கடன், வீட்டு கடன், கார் கடன் என பல்வேறு பிரிவுகளில் வங்கிகள் கடன்களை வழங்கி வருகின்றன. வட்டியுடன் சேர்த்து ஒவ்வொரு மாதமும் செலுத்தும் சந்தாவை முறையாக செலுத்திவிட்டால், எந்த பிரச்னையும் இருக்காது.


தவறிவிட்டால் வங்கியின் சட்டட்ரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும். அதேநேரம், வீட்டு கடன்களுக்கு நீண்ட காலம் சந்தா செலுத்த வேண்டி இருப்பதால், அசல் தொகைக்கு நிகரான வட்டியும் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், வங்கிகளில் வாங்கும் வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிப்பது மற்றும் வட்டி பணத்தை சேமிப்பது எப்படி என்பதற்கான சில ஆலோசனைகளை இந்த தொகுப்பில் அறியலாம்.


கடனை விரைந்து செலுத்துவதற்கான வழிகள்:


01. கூடுதல் மாத சந்தா:


வங்கியில் பெற்ற வீட்டு கடனுக்கு ஏற்றவாறு பிரதி மாதம் சந்தா என ஆண்டிற்கு 12 சந்தாக்களை வழக்கமாக வங்கியில் செலுத்துவது வழக்கம். அதோடு, கையில் சேமிப்பு இருந்தால் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூடுதலாக ஒரு மாத சந்தாவை சேர்த்து செலுத்தும் வாய்ப்பு அனைத்து வங்கிகளிலும் உள்ளது. இதனை பயன்படுத்துவதன் மூலம் ஏற்கனவே குறிப்பிட்ட காலங்களுக்கு முன்னதாகவே, வங்கிக் கடனை செலுத்த முடியும். 


லாபம் என்ன?


20 வருடங்களில் செலுத்தும் வகையில் ரூ.50 லட்சத்தை 7.5% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனாக பெறுபவர்கள்,  ஒவ்வொரு மாதமும் ரூ.40,280 சந்தாவாக செலுத்துவர். அதன்படி, 20 ஆண்டுகளுக்கும் மாத சந்தாவை செலுத்தினால் வாங்கிய கடனான ரூ. 50 லட்சத்திற்கு ரூ.46.7 லட்சத்தை வட்டியாகச் செலுத்த நேரிடும்.


அதேநேரம், ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஒரு மாத சந்தா செலுத்துவதன் மூலம், வீட்டுக் கடனை 16-17 வருடங்களில் முடித்து விடலாம். அதோடு 38.15 லட்சம் ரூபாய் மட்டுமே வட்டி செலுத்துவீர்கள். இதனால் பயனாளர் கட்டும் வட்டி குறைவதோடு, குறைந்த வருடங்களில் வீட்டுக் கடனும் முற்றிலுமாக தீர்ந்துவிடும்.


ப்ரீ-பேமண்ட் எப்படி?


வாங்கிய கடனை விரைந்து செலுத்தி முடிக்கும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் ப்ரீ-பேமண்ட் வசதி வழங்கப்படுகிறது. பெரும்பாலும் கடன் வாங்கிய முதல் 12 மாதங்களுக்கு இந்த ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை. அதற்கு பின்பு இந்த ப்ரீ-பேமண்ட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். நிலுவையில் உள்ள அசல் தொகையில் 25 சதவிகிதம் வரை ப்ரீ - பேமண்ட் முறையில் பணத்தை செலுத்தலாம்.


Tenure அல்லது EMI எதை குறைக்க வேண்டும்?


ப்ரீ - பேமண்ட் தொகையை செலுத்தும்போது Tenure அல்லது EMI எனப்படும் பிரதி மாதம் செலுத்தும் சந்தா தொகை இவற்றில் எதை குறைக்க வேண்டும் என வங்கி சார்பில் கேட்கப்படும். அந்த சமயங்களில் சந்தா தொகையை அப்படியே வைத்துக்கொண்டு சந்தா செலுத்தும் கால அவகாசத்தை குறைத்துக்கொள்வதாக அறிவிப்பது சிறந்த முடிவாக இருக்கும். இதன் மூலம் செலுத்தும் வட்டி தொகை குறைவதோடு, கடனும் விரைந்து கட்டி முடிக்கப்படும்.


உதாரணம்:


20 வருடங்களில் செலுத்தும் வகையில் ரூ.30 லட்சத்தை 8% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனாக பெறுபவர்கள்,  ஒவ்வொரு மாதமும் ரூ.25,000 சந்தாவாக செலுத்துவர். வாடிக்கையாளர் வட்டியை திருப்பி செலுத்தும் கால கட்டத்தில் 5வது வருடத்தின் முடிவில் ரூ.5 லட்சத்தை ப்ரீ-பேமண்டாக செலுத்துகிறார் என கருதுவோம்.


இப்போது, மீதமுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்தாவை செலுத்துகிறேன், மாத சந்தா தொகையை குறைத்தால் மட்டும் போதும் என முடிவெடுத்தால், வாடிக்கையாளருக்கு ரூ.3.60 லட்சம் வரை வட்டி மிச்சமாகும். அதேநேரம், சந்தா தொகை அப்படியே இருக்க மாத சந்தா செலுத்தும் கால அளவை மட்டும் குறைத்தால், அடுத்த 10.5 ஆண்டுகளுக்கு மட்டும் மாத சந்தா செலுத்தினால் போதும். அதோடு, ரூ.8.50 லட்சம் வரை வட்டி தொகையை சேமிக்கலாம்.