தமிழ் சினிமாவில் ‘குத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா. சிம்புவுக்கு ஜோடியாக குத்து படத்தில் ரம்யா எனும் பெயரில் திவ்யா ஸ்பந்தனா அறிமுகமானார். 


அதனைத் தொடர்ந்து  தனுஷ் உடன் ‘பொல்லாதவன்’, நடிகர் அர்ஜூன் உடன் ‘கிரி’, இயக்குநர் கௌதம் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களில் திவ்யா ஸ்பந்தனா நடித்திருந்தார்.


மேலும் கன்னட சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்த திவ்யா ஸ்பந்தனா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் கால்பதித்தார். கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் 2013ஆம் ஆண்டு ஜெயித்த திவ்யா எம்பியானார். ஆனால் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.


தற்போது ரம்யா மீண்டும் சினிமாவில் குதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், திவ்யா தனக்கு தற்கொலை எண்ணம் எழுந்ததாகவும் தான் போராடி வெளிவந்துள்ளதாகவும் முன்னதாக நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.


”எனது தந்தையை இழந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு நான் நாடாளுமன்றத்தில் இருந்தேன். நான் நாடாளுமன்றத்தில் இருந்ததால் வேலைப்பளு அதிகமாக இருந்தது. என் வீட்டினருடன் இதனால் நேரத்தை செலவழிக்க முடியவில்லை. என் அப்பா திடீரென்று ஒரு நாள் உயிரிழந்துவிட்டார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி கேட்க கூட எனக்கு யாரையும் தெரியாது, எதைப்பற்றியும் தெரியாது. அப்போது நான் மிகுந்த மன அழுத்தத்துக்கு சென்றேன். ஏன் வாழ வேண்டும், தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன ஆறுதல், தைரியம் ஆகியவற்றை அளித்தார்.


என் துக்கத்தை என் வேலையை நோக்கி செலுத்தினேன். எனக்கு ஊக்கம் கொடுத்தவர்களில் முக்கியமானவர்கள் என் அம்மா, அடுத்தது என் தந்தை, மூன்றாவது ராகுல் காந்தி. இப்படிப்பட்ட சூழலில் ராகுல் காந்தி எனக்கு உதவினார்” என திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். இந்நிலையில், திவ்யா ஸ்பந்தனா குறித்த இந்தத் தகவல் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 


நடிப்பு, அரசியல் தாண்டி திவ்யா ஸ்பந்தனா தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். திரைப்படங்கள், வெப் சீரிஸ் என தயாரிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050



மேலும் படிக்க: Manisha Koirala on Baba: பாபா படத்தால் என் மார்க்கெட்டை இழந்தேன்... மனிஷா கொய்ராலாவின் ஸ்டேட்மென்ட்! கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்


Sengalam Web Series Review: அட்டகாசமான அரசியல் த்ரில்லரா ‘செங்களம்’ தொடர்? விமர்சனத்தை படித்து தெரிஞ்சுக்கோங்க பாஸ்!