மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் 'அன்றில் 23' நாட்டுப்புறக் கலைத் திருவிழா மார்ச்.31ஆம் தேதி நடைபெற்றது.
நாட்டுப்புற கலைஞர்கள்:
இதில், தமிழ்த்துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முளைப்பாரியில் 20 மாணவர்கள், தப்பாட்ட நிகழ்ச்சியில் 12 மாணவர்கள், சிலம்பாட்ட நிகழ்ச்சியில் 12 மாணவிகள், கோலாட்ட நிகழ்ச்சி 20 மாணவிகள் கலந்து கொண்டனர். கும்மியடி நிகழ்ச்சிகளுடன் கல்லூரி கலைப்பாட (Arts. Block) வளாகத்தில் இருந்து காலை 9 மணி அளவில் தொடங்கிய இந்த ஊர்வலம் சாலையைக் கடந்து அறிவியல் பாட வளாகம் வரை சென்றது. மாணவ, மாணவிகளின் பல்திறன்களை வெளி உலகத்திற்குப் பறைசாற்றும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் இசைவாத்திய நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.
பிற துறை மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற இந்நிகழ்விற்கு தமிழ்த்துறை தலைவர் முனைவர் சாந்தி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் மா.புவனேஸ்வரன் தனது தலைமை உரையில் "மண் மனம் மாறாத நாட்டுப்புறக் கலைகளையும் நாட்டுப்புறப் பண்பாட்டையும் இன்றைய தினம் வெளிநாட்டவர்களே ஆர்வத்துடன் ஆய்வு செய்து பட்டம் பெற்று வருகின்றனர்.
அதே நேரத்தில் இக்கலைகள் இன்றைய இளம் தலைமுறையினர் அறிவதற்கு அதிசயப் பொருளாகவும் மறைந்து வரும் கலைகளாகவும் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழ்த்துறையைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வைக் காணும்போது இனிவரும் ஆயிரம் ஆண்டுகள் இப்பூமியில் மங்காத புகழுடன் தமிழக நாட்டுப்புறக் கலைகள் வாழ்ந்து வரும் என்ற நம்பிக்கை வெட்ட வெளிச்சமாகத் திகழ்கிறது. இந்நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த துறைத் தலைவர், பேராசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டுகள்" என்று கூறினார்.
விவேகானந்தரின் 100 இளைஞர்கள்:
துணை முதல்வர் முனைவர் பெரி. கபிலன் தன் வாழ்த்துரையில், " இத்தேசத்தை மாற்றிக் காட்ட விவேகானந்தர் விரும்பிய நூறு இளைஞர்களும் இந்தத் தமிழ்த் துறையில் தான் உள்ளார்கள். மிகச் சிறந்த கலைஞர்களாக வல்லுனர்களாக மாற்றம் பெற வாழ்த்துகள்” என்று கூறினார்.
நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக மயிலேறும் ராவுத்தர் ராஜ பார்ட் ராஜா முகமது கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தன் உரையில் ”தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில், இக்கல்லூரி மாணவர்களின் நாட்டுப்புறக்கலைத் திருவிழா மரபு சார்ந்து நடத்தப்பட்டு, அதேபோல் புதுமையாகவும் உள்ளது .
மக்களுக்காக கலை:
மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கலைஞரே என்றால் அது மிகையன்று. இக்கல்லூரி மாணவர்களின் நிகழ்வு உலகளாவிய சிந்தனை உடையது. கலைகள் கலைக்காகவே என்பதோடு மட்டுமல்லாமல் கலை மக்களுக்காகவே என்பதனை இம்மாணவர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள்" என்று கூறினார் .
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி நிறைவாக முனைவர் அருள் ஜோதி நன்றி உரை கூறினார் .