மும்பை அண்இக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 


இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின்  ஆறாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. 


சொதப்பிய டாப் ஆர்டர் 

 

தனது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணியின் ரோகித் ஷர்மாவும், இஷான் கிஷனும் செட் ஆவதற்குள் இஷான் கிஷன் விக்கெட் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் மும்பை அணியின் பேட்டிங் ஆர்டரின் நம்பிக்கை நாயகன் கேமரூன் க்ரீன் இறங்கினார். அவர் டோப்ளே பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேற, மும்பை அணி 3.3 ஓவரில் இரண்டு விக்கெட்டை இழந்து 16 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்தது. 

 

பவர்ப்ளே நிலவரம் 

 

தொடக்கம் முதல் தடுமாறி வந்த ரோகித் சர்மா 10 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இவருக்கு இரண்டு முறை விக்கெட்டில் இருந்து தப்பும் வாய்ப்பு கிடைத்தும் சொதப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் களத்திற்கு வந்த திலக் வர்மா சூர்ய குமார் யாதவுடன் இணைந்தார். பவர்ப்ளே முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் சேர்த்து இருந்தது. இருவரும் கிடைத்த பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி வந்தனர். 

 

மீட்ட மிடில் ஆர்டர்

 

நிதானமாக ஆடிவந்த சூர்யகுமார் யாதவ் 15 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுக்க 50 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து மிக மோசமான நிலைக்குச் சென்றது. அதன் பின்னர் மெல்ல மெல்ல அணியை சரிவில் இருந்தும் மீட்கும் பணியை இளம் வீரர்களான திலக் வர்மா மற்றும் வதேரா சிறப்பாகச் செய்தனர். 



திலக் வர்மா ஒன்மேன் ஆர்மி

 

13வது ஓவரில் அடுத்ததடுத்து சிக்ஸர்களை வதாரா பறக்கவிட்டதால்  திலக் -  வதேரா ஜோடி 30 பந்துகளில் 50 ரன்களை சேர்தது. ஆனால் அடுத்த பந்தில் வதேரா தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் வந்த டிம் டேவிட்டும் சொதப்ப 105 ரன்களுக்குள் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் தடுமாற்றம் அடைந்தது. பொறுப்புடன் விளையாடிய திலக் வர்மா சிறப்பாக அரைசதம் கடந்தார். இறுதியில் மும்பை அணி விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை களத்தில் இருந்த திலக் வர்மா 84 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி சார்பில் கரன் சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 



ருத்ரதாண்டவமாடிய தொடக்க ஜோடி 

 

அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஜோடி அதிரடியாக ஆடினர். இருவரும் மும்பை அணியின் பந்து வீச்சை சுக்கு நூறாக நொருக்கினர். இருவரும் மைதனம் முழுவதும் வான வேடிக்கை காட்டினர். மும்பை அணியின் பந்து வீச்சுக்கு பெரும் நம்பிக்கையாக கருதப்படும் ஆர்ச்சர் பந்து வீச்சில் மட்டும் இருவரும் இணைந்து 33 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் விளாச, மும்பை அணியின் கேப்டன் என்ன செய்வது என தெரியாமல் இருந்தார். விராட் கோலி கொடுத்த கேட்சையும் ஹிர்திக் வீணடித்தார்.

பெங்களூரு வெற்றி 

 

மும்பை அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அணியின் ஸ்கோர் 148 ரன்களாக இருந்த போது  டூ பிளசிஸ் தனது விக்கெட்டை இழந்தார்.  இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில்  முதல் விக்கெட்டுக்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் ஒரு ரன் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  இறுதியில் பெங்களூரு அணி 16.2 ஓவர்களில்172 ரன்களை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி வரை களத்தில் இருந்த விராட் கோலி 49 பந்தில் 82 ரன்கள் குவித்தார். 



மும்பைக்கு தொடரும் சோகம்

 

2013ஆம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. இம்முறை இந்த வரலாறு மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இம்முறையும் மும்பை அணி தனது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது.