ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள செங்களம் தொடர், ட்ரைலர் ரிலீஸின் போதே மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. படக்குழுவினரும், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இக்கதை ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர் என கூறியதால், இதன் மீதிருந்த எதிர்பார்ப்பு மேலும் கூடியது. 9 எபிசோடுகளை கொண்ட செங்களம் தொடர் எப்படித்தான் இருக்கிறது? வாங்க பார்க்கலாம்.


கதையின் கரு:


நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆசைப்படும் அரசியல் ஓநாய்கள்…3 கொலைகளை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் அண்ணன் தம்பிகள், இன்னும் 2 கொலை செய்ய உள்ளதாக போலீசிடமே சவால் விடுகின்றனர்..யார் இவர்கள்? நகராட்சி மன்ற தலைவர் சீட்டிற்கும் இவர்கள் செய்யும் கொலைகளுக்கும் என்ன சம்மந்தம்? விவரிக்கிறது செங்களம் தொடர்.


குடும்ப அரசியல்:


விருதுநகர் மாவட்ட நகராட்சியின் மன்ற தலைவர் பதவியை  40 ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டுள்ளது, சிவஞானம் மற்றும் அவரது குடும்பம். தாத்தா, அப்பா, மகன் என அவர்களது மொத்த குடும்பமே பரம்பரை பரம்பரையாக அரசியல் செய்கின்றனர். அந்த தொகுதியில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வேல ராமமூர்த்திக்கு இல்லாத செல்வாக்கு கூட, நகராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது. இதனால், எப்படியாவது இந்த அரசியல் குடும்பத்தை கலைக்க வேண்டும் என முடிவு செய்கிறார். அப்பா சிவஞானத்தை அடுத்து, அவரது மூத்த மகன் ராஜமாணிக்கம் நகராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கும் சூர்ய கலாவிற்கும் (வாணி போஜன்) திருமணம் நடக்கிறது.  


பறிபோன உயிரும்-பதவி ஆசையும்!


ராஜ மாணிக்கமும் சூர்ய கலாவும் கொடைக்கானல் மலைக்கு ஹனிமூன் செல்கையில், விபத்து ஏற்படுகின்றது. இதில், ராஜ மாணிக்கம் உயிரிழக்கிறார், சூர்யகலா பிழைத்து கொள்கிறார். அடுத்த நகராட்சி மன்ற தலைவர் யார் என அனைவரும் கேட்க, உயிரிழந்த தன் மகனின் மனைவி சூர்யாவை தேர்தலில் நிற்க வைத்தால் ‘சிம்பதி’ ஓட்டு பெறலாம் என திட்டம் தீட்டுகிறார், சிவஞானம். இந்த திட்டம், இவரது இரண்டு பிள்ளைகளுக்கு பிடிக்காமல் போக, அவர்கள் சூர்ய கலாவின் மீது வன்மம் கொள்கின்றனர். சூர்யாவிற்கும் பதவி ஆசை கொஞ்சம் கொஞ்சமாக பற்றிக்கொள்கிறது. இதனை தெரிந்து கொண்ட சிவஞானம், தனது முடிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ‘ஜகா’ வாங்குகிறார். இறுதியல் நகராட்சி மன்ற தலைவராக நிற்க வைக்க அவர் தேர்ந்தெடுத்த நபர் யார்? 




கூட்டாக சேர்ந்து கொலை செய்யும் அண்ணன்-தம்பிகள்:


விருதுநகர் மாவட்டத்தில் தனது தம்பிகளின் துணையுடன் 3 கொலைகளை செய்துவிட்டு தம்பிகளுடன் தலைமறைவாக இருப்பவன்,  ராயர் (கலையரசன்), இவர்களை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக இறங்கியுள்ள காவல் அதிகாரியிடமே இன்னும் 2 கொலைகளை செய்ய உள்ளதாக சவால் விடுகின்றனர். சொன்னது போலவே, எம்.எல்.ஏ வேல ராமமூர்த்தியையும் அவரது பி.ஏவையும்  (பக்ஸ்) கொலை செய்கின்றனர். இவர்களுக்கும் கொலை செய்யப்பட்ட நபர்களுக்கும் என்ன தொடர்பு? இப்படி பல கேள்விகளுக்கு மிகக்குறுகிய திருப்பங்களுடன் விடையாக வருகிறது மீதி கதை. 


அமர்களமான ஆரம்ப எபிசோடுகள்:


செங்களம் தொடர், முதல் எபிசோடிலிருந்து கடைசி எபிசோடு வரை, “அன்று ஒரு நாள்” “இன்று” என ஃப்ளேஷ்பேக்கிலும் நிகழ் காலத்திலும் பயணிப்பது போன்று காட்சி படுத்தப்பட்டுள்ளது. கதையின் முதல் நான்கு எபிசோடுகள் திருமணம், மரணம், கொலை என பயணிப்பதால் வேகமாகச்செல்கிறது. இதையடுத்து வரும் எபிசோடுகிளில் அரசியல் ஆதாயங்கள், பதவி ஆசை, அதற்காக செய்யப்படும் குற்றச்செயல்கள் என காண்பிக்கப்படுகின்றன. இதனால், 6ஆவது எபிசோடு வரை செங்களம் எந்த வித வேக தடையுமின்றி ஹை ஸ்பீடில் செல்கிறது. வாணி போஜனின் அரசியல் ஆசைக்குப்பின்னர், கதை சூடு பிடிக்கும் என்று பார்த்தால் அதற்கு அப்படியே நேர்மாறாக ரசிகர்களை தொய்வடையச் செய்கிறது. தொடரில், தமிழ்நாட்டின் அரசியலை ஆங்காங்கே குறியீடுகளாக வைத்துள்ளது, ரசிகர்களை ஈர்த்துள்ளது. 




புதுமை காட்டிய வாணி போஜன்..


சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த வாணி போஜன், சாஃப்டான பெண் கதாப்பாத்திரங்களில்தான் இத்தனை நாட்களாக நடித்துவந்தார். இத்தொடரின் மூலம் தனது கதாப்பாத்திர தேர்வில் புதுமை காட்டியுள்ள அவர், அதற்கு ஏற்ற நடிப்பிலும் சோடை போகவில்லை.  தொடரில் கலையரசன், வாணி போஜன், பவன், சரத் லோகிதஸ்வா, விஜி சந்திரசேகர்போன்ற பல நட்சத்திரங்கள் உள்ளனர். அவர்களின் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப அனைவருக்கும் சமமான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும், தங்களது கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற பணியை செவ்வனே செய்து கொடுத்திருக்கின்றனர். 


திருப்பங்களை திருப்தியாக வைத்திருக்கலாம்..


தமிழில் இதுபோன்ற முழுநீள அரசியல்-த்ரில்லர் வருவது இதுவே முதல் முறை. அரசியில் இருப்பவர்களுக்கு பதவியும் பவரும் எவ்வளவு பெரிய போதை என்பதை அப்பட்டமாக கூறியதற்காக, இயக்குனரை நிச்சயம் பாராட்ட வேண்டும். கதையின் சில திருப்பங்கள் எதிர்பாராதவையாகவும், பல திருப்பங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தவையுமாக இருந்ததால், இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான ட்விஸ்டுகளை கதையில் வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தமிழ் நாட்டு அரசியலை, விருதுநகர் மாவட்ட நகராட்சியில் நடக்கும் உள்ளூர் அரசியலை போன்று காண்பித்த விதத்தில் ரசிகர்களின் மனதில் தேர்ச்சி பெருகிறார், இயக்குனர். 


மொத்தத்தில், கொஞ்சம் பொறுமையாக பார்த்தால், கடந்த 30 வருடங்களில் நம்ம ஊரில் நடைப்பெற்ற அரசியல் சம்பவங்களை கண்முன் நிறுத்தி விடுகிறது செங்களம் தொடர்.