சினிமாவில் இடைவெளி எடுத்ததை நினைத்து நான் கவலைப்பட்டது இல்லை என நடிகை அபிராமி தெரிவித்துள்ளார். 


1995 ஆம் ஆண்டு கதபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அபிராமி. தொடர்ந்து 199ல் பத்ரம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினார். இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜூன் நடித்த ‘வானவில்’ படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் விருமாண்டி படத்தில் அவரின் அன்னலட்சுமி கேரக்டர் ட்ரேட் மார்க் ஆக அமைந்தது. 


இதன்பின்னர் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆன அபிராமி, 10 ஆண்டுகள் கழித்து  2015 ஆம் ஆண்டு ஜோதிகா ரீ-எண்ட்ரீ கொடுத்த ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். பின்னர் மாறா, சுல்தான், நித்தம் ஒரு வானம், பாபா பிளாக்‌ஷீப், ஆர் யு ஓகே பேபி? என படங்களில் நடித்த அவர், சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் ”மகாராஜா” படத்தில் நடித்துள்ளார். 


இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அபிராமி, “நான் 16 வயதில் சினிமாவில் நடிக்க வந்தேன். அடுத்த 5 வருடத்தில் கிட்டதட்ட 20 படங்கள் நடித்தேன் என நினைக்கிறேன். எனக்கு சுத்தமாக சினிமா பின்னணி என்பது இல்லை. எனது பெற்றோர் வங்கியில் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். நான் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்தேன். எல்லாமே பிளான் பண்ணி செய்து கொண்டிருந்தேன். அதனால் சினிமாவை விட்டு விலகியது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேசமயம் புதிய நாடு, வாழ்க்கை, அடுத்தக்கட்ட படிப்பு என்ற ஒரு திரில்லான அனுபவத்தை சந்திக்க சென்றேன். அதுவும் எனக்கு ரொம்ப வியப்பா இருந்ததால் சினிமாவை விட்டு போனதில் வருத்தமில்லை. 


இத்தனை ஆண்டுகள் கழித்து திரும்ப வரலாம் என்ற பிளானும் இல்லை. ஆனால் விஸ்வரூபம் படத்துக்காக கமல்ஹாசன் என்னை மறுபடியும் அழைத்து வந்தார். அந்த டப்பிங்கிற்காக வந்ததும் திரைத்துறையில் என்னுடைய வருகை தெரிய ஆரம்பித்தது. தொடர்ந்து வாய்ப்புகள் இயற்கையாகவே அமைந்தது. அமெரிக்காவில் வேலை விட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தலாம் என ரிஸ்க் எடுத்தபோது தான் முடிவுக்கு வந்தேன். பெற்றோர், கணவர், அவர் குடும்பத்தினர் ஆசீர்வாதத்தால் எல்லாம் நடந்தது. 


நிறைய பேர் நான் அமெரிக்காவில் இருப்பதாக நினைத்து கொண்டிருந்தார்கள். என்னை அழைத்தால் விமானத்துக்கு டிக்கெட் போட வேண்டுமே என நினைக்கிறார்கள். இன்னும் சிலருக்கு நான் மலையாளியா, தமிழ் பெண்ணா என்ற சந்தேகம் இருக்கிறது.இதற்கு பலமுறை நான் விளக்கம் கொடுத்து விட்டேன்” என தெரிவித்துள்ளார். கடைசியாக 2004ல் தமிழில் கமல் இயக்கி நடித்த  விருமாண்டி படத்தில் தான் நடித்தார் அபிராமி. மீண்டும் அவரை விஸ்வரூபம் படத்துக்காக டப்பிங் பேச அழைத்து வந்தார். தற்போது கமல் நடிக்கும் தக் ஃலைப் படத்திலும் நடிக்கிறார்.