விஜய் சேதுபதி


நடிகர் விஜய் சேதுபதி தனது 50 ஆவது படமான மகாராஜா படத்திற்காக ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார். நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அனுராக் கஷ்யப் , மம்தா மோகந்தாஸ் , அபிராமி , நடராஜ் சுப்ரமணியன் , சிங்கம் புலி , முனிஷ் காந்த் , பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அஜ்னீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகிய மகாராஜா படம் மக்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 4 நாட்களில் இந்தியளவில் 30 கோடி வரை படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜய் சேதுபதி நடித்ததிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக மகாராஜா இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


மகாராஜா படம் வெளியாவதற்கு முன்பும் படம் வெளியான பின்பும் ஊடகங்களில் தொடர்ச்சியாக பேசி வருகிறார் விஜய் சேதுபதி. தனது இளமைக் காலம் , துபாயில் வேலை, குடும்பச் சூழல் , தனக்கு இருந்த ஆசைகள்  என பல்வேறு விஷயங்களை அவர் பேசி வருகிறார். இப்படியான நிலையில்  நேர்காணல் ஒன்றில் தான் ட்ரோல் செய்யப்பட்டது குறித்து அவர் பேசியுள்ளார்.


அயர்ன் மேன் டப்பிங் 






கடந்த 2019 ஆம் ஆண்டு மார்வெல் தயாரிப்பில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் வெளியாகியது. உலகம் முழுவதும் இருந்த மார்வெல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்தப் படம் அமைந்தது. தமிழ் ரசிகர்களிடமும் இப்படம் பெரியளவில் வரவேற்பு இருந்த காரணத்தினால் இப்படத்தில் ராபர்ட் டெளனி ஜூனியர் நடித்த அயர்ன்  மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்தார்.


படம் பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியின் குரல் சுத்தமாக செட் ஆகவில்லை என்று சமூக வலைதளங்களில் மீம்கள் பகிர்ந்தன. இது குறித்து நடிகர் விஜய் சேதுபதியின் கேள்வி எழுப்பப் பட்டபோது “அயர்ன் மேன் கேரக்டருக்கு ஏற்கனவே ஒருவர் குரல் கொடுத்திருக்கிறார். அதைதான் மக்கள் பார்த்து பழக்கப் பட்டிருக்கிறார்கள். அதனால் நான் அதற்கு டப்பிங் கொடுத்தால் அது செட் ஆகாது என்று எனக்கு தெரிந்தது. படத்தின் டப்பிங்கின் போது மும்பையில் இருந்து பெண் ஒருவர் வந்திருந்தார். அவர் தான் சுத்தமாக நேரமேயில்லை சீக்கிரமாக டப்பிங்கை முடிக்க வேண்டும் என்று சொன்னார்.


படம் வெளியாவதற்கு வெறும் நான்கு நாட்களே மீதமிருந்தன. செட் ஆகாது என்று எனக்கு தெரிந்தது. ஆனால் இவ்வளவு ட்ரோல் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.