Manikandan Movie: ஜெய்பீம், குட்நைட் படம் மூலம் பிரபலமான மணிகண்டன் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். 

 

காதலும் கடந்து போகும், காலா, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, நெற்றிக்கண், ஜெய்பீம் படங்களில் நடித்து பிரபலமான மணிகண்டன், குட்நைட் படத்தில் ஹீரோவாக நடித்து வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஓடிடி தளத்தில் அதர்வா நடிப்பில் வெளியான மத்தகம் என்ற வெப் தொடரிலும் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தார். 

 

இந்த நிலையில் மணிகண்டன் அறிமுக இயக்குநரான நக்கலைட்ஸ் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். காமெடி கலந்த குடும்ப பின்னணியில் உருவாகும் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், ”ஒரு சாதாரண  நடுத்தர குடும்பத்து இளைஞன் தன் மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களுமே இத்திரைப்படத்தின் மையக்கருவாகும். இத்திரைப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்பட இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.  இக்கதை நம் குடும்பங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும் சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை​” என கூறப்பட்டுள்ளது. 



‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் இந்தப் படத்தை வினோத்குமார் தயாரிக்கிறார். படத்தின் வசனத்தை பிரசன்னா பாலசந்திரன் எழுதியுள்ளார். படத்திற்கு சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, வைசாக் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணியில் கண்ணன் இணைந்துள்ளார். படத்தில் மணிகண்டனுடன் இணைந்து சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், தனம், பிரசன்னா பால்சாந்திரன், ஜென்சன் உள்ளிட்ட பலர் நடிக்க இணைந்துள்ளனர். 

குடும்பக் காமெடி கதையில் மணிகண்டன் நடிப்பதை பற்றி ராஜேஷ்வர் காளிசாமி கூறும்போது, “இந்தக் கதையை சில வருடங்களுக்கு முன்பே உருவாக்கிவிட்டோம். இதில் மணிகண்டன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் சொன்னோம். ஸ்கிரிப்டை படித்ததும் அவருக்கும் கதை பிடித்துவிட்டது. இப்போது படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறோம். வித்தியாசமான கதைக்களம், நகைச்சுவைப் பின்னணியில் மணிகண்டன் ஒரு கலக்கு கலக்குவார் என்று படக்குழு எதிர்பார்க்கிறது” என பேசியுள்ளார்.