பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான 'லவ் டுடே' என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை இவானா, தற்போது மாறுபட்ட த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'மதிமாறன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


அவருக்கு ஜோடியாக நடிகர் வெங்கட் செங்குட்டுவன் லீட் ரோலில் நடித்துள்ளார். ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் என்ற பேனரின் கீழ் லெனின் பாபு தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்க, எம்.எஸ். பாஸ்கர், ஆராத்யா, சுதர்ஷன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர், ஊடகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


 



எம்.எஸ். பாஸ்கர் தகவல் : 


இப்படத்தில் ஹீரோயின் இவானாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில் " இப்படத்தின் கதை மிகவும் அருமையாக இருந்தது. இயக்குநர் என்னிடம் கதையை சொல்லும் போதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. படத்தில் நடித்துள்ள அனைத்து கேரக்டர்களுமே மிகவும் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஒரு சில இடங்களில் நான் மிகவும் எமோஷனலாகவும் உணர்வுபூர்வமாகவும் வசனங்களை பேசியுள்ளேன்.


உருவக் கேலி :


என்னை இப்படத்தின் கதை கண்கலங்க வைத்தது. ஹீரோவாக நடித்துள்ள நடிகர் வெங்கட் செங்குட்டுவன் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார். ஒவ்வொரு ஷாட்டும் நடித்ததற்கு பிறகு எப்படி நடித்தேன் என கேட்டுக் கொண்டே இருப்பார். அத்தனை ஆர்வத்துடன் நடித்தார்.


உயரத்தில் என்ன இருக்கிறது. எனக்கு கூட முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் கிடைத்தன. என்னையும் பல பேர் கிண்டல் செய்துள்ளார்கள். உலக அளவில் சாதனை படைத்த பலரும் உருவத்தில் குறைவாக தான் இருந்துள்ளார்கள். அதற்கு எல்லாம் கவலைப்பட கூடாது. என்னுடைய மகளாக நடித்த இவானாவும் மிக சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக அமையும்" எனப் பேசியிருந்தார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.


 



 


இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் ரத்ன சிவா, பாடலாசிரியர் சினேகன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 


சமீப காலமாக சினிமா மூலம் சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உருவக்கேலியை விமர்சிப்பவர்களை சாடி எடுக்கப்பட்டு இருக்கும் இப்படம் நிச்சயம் மக்களின் பேராதரவை பெற்று வெற்றி படமாக அமையும் என்பது படக்குழுவினரின் எதிர்பார்ப்பு. இப்படம் இம்மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.